தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்துடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதன்போது முஸ்லிம்களும் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழும் வகையிலான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவாறான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாம் இணைந்த வட கிழக்கில் அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி முறைமையை கோருகின்றபோது தற்போது முஸ்லிம் சகோதரர்கள் சிலர் அதனை எதிர்க்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலத்தில் பெருந்தலைவர் அஷ்ரபுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் படி வடகிழக்கின் பூர்வீக சகோதர இனத்தவர்களான தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதெனவும் விசேடமாக வடக்கு கிழக்கு இணைகின்றபோது முஸ்லிம்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அது குறித்து நாம் தற்போதைய தலைமைகளுடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்துள்ளோம். முஸ்லிம் பிரதிநிதியை முதலமைச்சராக நியமிக்க அங்கீகாரமளித்துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் அநீதி இழைக்கப்போவதில்லை. இணைந்த வடக்கிழக்கில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்கின்றபோது முஸ்லிம்களின் விடயத்தினையும் நாம் கருத்தில் கொள்வோம். ஆகவே அதற்கான கலந்துரையாடல்களை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம் என்றார்.