காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்களாக அங்கு அமைதி திரும்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதங்கள் காரணமாக 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 22 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வன்முறைகள் காரணமாக 81 வீடுகளும் 18 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் 6 முச்சக்கர வண்டிகளும் ஒரு லொறியும் வேன் ஒன்றும் 8 மோட்டார் சைக்கிள்களும் தாக்கியும் எரித்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் 8 திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிந்தோட்டை பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு கூட்டாக முகங்கொடுக்கும் வகையில் கிந்தோட்டை பிரதேசத்தை மையப்படுத்தி அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை முறையாக பதிவு செய்து ஆவணப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஹிபிஷி (கபூரி) 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
கிந்தோட்டை பிரதேசத்தில் கள நிலைவரங்கள் மற்றும் தமது அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அசம்பாவிதங்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பான பதிவுகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
எமது அமைப்பின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சேத விபரங்களை பதிவு செய்துள்ளனர். இதேபோன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக சேவைப் பிரிவினருக்கும் இந்த விபரங்களை கையளித்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்டயீடு வழங்கப்படும் என பிரதமரும் அமைச்சர்களும் உறுதியளித்துள்ள போதிலும் இதுவரை கிராம சேவகர்களோ, பிரதேச செயலக அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவோ சேத விபரங்களைப் பதியவோ இல்லை. மக்கள் அதிகாரிகளின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் சட்டத்தரணிகள் குழுவினரும் எமது பிரதேசத்துக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளனர்.
நாம் கிந்தோட்டை பிரதேச அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து தொடர்ச்சியாக கலந்துரையாடல்களையும் திட்டமிடல் அமர்வுகளையும் நடாத்தி வருகிறோம்.
பிரதேசத்தில் தற்போது அமைதி நிலவுகிறது.எனினும் இரவு வேளைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக மக்கள் மத்தியில் இன்னமும் வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளன. இதனால் இரவு வேளைகளில் மக்கள் மத்தியில் சற்று அச்சம் நிலவுவதையும் காண முடிகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் காலி, மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் வீடொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் அங்கிருந்த பெண் ஒருவரை தாக்கி வீட்டைத் தீ வைத்துக் கொளுத்த முற்பட்ட சம்பவம் பிரதேசத்தில் மீண்டும் பதற்றத்தையும் சலசலப்பையும் தோற்றுவித்திருந்தது. எனினும் குறித்த சம்பவமானது தனிப்பட்ட விவகாரம் ஒன்றுடன் தொடர்பானது எனவும் இதற்கும் இன முறுகல்களுக்கும் தொடர்பில்லை எனவும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.