அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த எனக்கு அரசியல் சொல்லித்தர வருகிறீர்களா என்று கேட்கும் ஐயா,
அஷ்ரப் உருவாக்கிய கட்சி இன்று சமூகத்தையே விலை பேசுகின்றதே, அதை தடுக்க கூட்டாக ஒன்றிணைய வேண்டும் என்பது ஆட்டுக் குட்டியின் பாசறையில் வளர்ந்தவனுக்கும் விளங்குமே?
உங்களைப் போன்றவர்கள் பயின்ற அரசியல், எமது சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியதை கடந்த காலங்களில் கண்கூடாகப் பார்த்தோமே. பாசறையில் பிழையா? அல்லது பயின்றதில் பிழையா?
அஷ்ரப் அஷ்ரப் என்று வாய்க்கு வாய் புகழ்ந்து, அஷ்ரப் மீது அபிமானம் கொண்ட வெளி ஊர் மக்களின் வாக்குகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் நீங்கள், அஷ்ரபின் முகத்தில் செல் போனை தூக்கி எறிந்த கதை அம்மக்களுக்குத் தெரியாது.
பதினெட்டுக்கும், திவி நெகும போன்ற இன்ன பிறவற்றுக்கும் நீங்களும் சேர்ந்து கை தூக்கியதை இன்னும் நாங்கள் மறக்கவில்லை.
உங்கள் ஒரு அடிவருடி சொன்னதாம், இங்கு அரசியல் செய்ய வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம் என்று. உங்களூர் வாக்குகளைப் மாத்திரம் வைத்துக்கொண்டு உங்களால் எம்பியாக முடியுமா? அதற்கு அயலூருக்குப் போனால் அவர்கள் உங்களை ஓட ஓட விரட்டமாட்டார்களா? என்ன சொல்லிக் கொடுக்கின்றீர்கள் இளைய சமுதாயத்திற்கு?
ஊர் கட்சி, ஊர் அதிகாரம் என்று இளைஞர்களை பிழையாக வழிநடத்தி நமதூரை ஏனைய ஊர்களுடன் பகையாக்கும் சுயநல அரசியல் செய்ய வெட்கமாயில்லையா?
காணிப் பிரச்சினையை எந்த ஒரு அரசும் தீர்க்காத நிலையில், அந்த அரசுகளில் அங்கம் வகித்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்து விட்டு, இப்போது குறை கூறுவானேன்? இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற மாட்டேன் என்றாவது சொல்ல முடியுமா? யாரை ஐயா ஏமாற்றப் பார்க்கிறீர்?
நானும் கூட்டமைப்புத்தான் என்று சொல்லி, கூட்டமைப்பில் இணைவதாக படம் காட்டி உங்கள் கூட்டங்கள் அனைத்தையும் வைத்து முடித்த பின்பு இப்போது வழமையான நயவஞ்சகதனத்தைக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அரசியல் வங்குரோத்து நிலை புரிகிறது.
தனித்தனியாக உங்கள் புத்திக்கு வேலை செய்து எம்மை ஆபத்தில் மாட்டி விட்டதெல்லாம் போதும்.
இனியாலும் கூட்டாக சிவில் அமைப்புக்களையும், புத்தி ஜீவிகளையும், துறைசார் ஆளுமைகளையும் இணைத்துக் கொண்டு இயங்குங்கள். மஷூரா முறையில் சமூகத்திற்கு நன்மையான முடிவுகளை எடுங்கள்.
உங்கள் பரிதாபகரமான தோல்வி உங்களுக்கு எதையும் கற்றுத் தரவில்லையா?
நீங்கள் தோற்ற அனுதாபத்தில் இந்த முறை நம்மூர் உங்களுக்கு ஒரு ஆறுதலைத் தரலாம்.
ஒவ்வொரு முறையும் தராது.
அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்