பிரச்சினைகளும், சிக்கல்களும் இருந்தாலும், உள்ளுராட்சித் தேர்தலை மேலும் தாமதிக்காது நடாத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை (17) சீன அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் (நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக) பேராதனை பல்கலைக்கழகத்தில் இருபதாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கவுள்ள இனங்காணப்படாத சிறுநீரக் நோயிக்கான ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து கண்டி, றோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவதை மேலும் தாமதிக்கக்கூடாது. உள்ளுராட்சி சபைகளுக்கு அரசியல் தலைமைத்துவங்களை பெற்றுக் கொடுப்பதை பிற்படுத்தாமல் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இந்த விடயத்தில் அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தேர்தல்கள் தாமதமாவதால் உள்ளுராட்சி அமைப்புக்களின் செயல்பாடுகளிலும் தேக்கநிலை காணப்படுகின்றது. இதனால் அவற்றால் பொது மக்களுக்காற்ற வேண்டிய சேவைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
தேர்தலை பொறுத்தவரை அதற்கு நாங்கள் இப்பொழுதே தயாராகிவிட்டோம். தேர்தல் முறையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. புதிய முறையை அறிமுகப்படுத்திருக்கின்றார்கள் . தேர்தல்களை நடாத்தி விட்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து மேற்கொள்ள முடியும். திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு இரண்டு வருடங்களை கடத்தியாகிவிட்டது.
அவ்வாறே எல்லை நிர்ணயத்திலும் குறைபாடுகள் காணப்பட்டன. இப்பொழுது நீதிமன்றத்தை நாடியிருப்பவர்கள்கூட எல்லை நிர்ணயத்தில் சில அநீதிகள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி பல அங்கத்தவர் தொகுதிகளை தீர்மானிக்கும்போது அவ்வாறு தீர்மானிப்பதற்குரிய காரணிகள் வேறு விதமாக கையாளப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
அதாவது, சிறுபான்மையினர் கணிசமாக வாழக்கூடிய பிரதேசத்தில் அதாவது வேறுவிதமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டவர்கள் குறிப்பிடத்தக்களவு வசிக்கின்ற பிரதேசத்தில் மக்கள் கலந்து வாழ்கின்ற பிரதேசத்தில் அத்தகையோருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக விN~டமாக நகரபுறப் பிரதேசங்களில் இவ்வாறான பல உறுப்பினர் தொகுதி ஏற்படுத்தப்படுவதுண்டு.
இதில் சில சிக்கல்கள் உள்ளனதான். கட்சியென்ற அடிப்படையில் அதுபற்றி விளக்கம் கோரி நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை வாக்குகளை பெற்றுக்கொள்கின்ற விதத்தில்தான் பல அங்கத்தவர் தொகுதி அமைய வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் செய்கின்ற வியாக்கியானத்தின்படி முதல் இடத்தைப் பெறும் கட்சிக்குத்தான் அவ்வாறான ஆசனங்கள் அனைத்தும் உரித்தாகுமெனக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு நடக்குமானால் பாரதூரமான அங்கலாய்ப்பு ஏற்படுவதற்கு இடமுண்டு. மூன்று உறுப்பினர்களைப் பெறக்கூடிய தொகுதியுண்டு. மூன்று ஆசனங்களும் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கே வழங்கப்படுவதனால் ஆசனக்குவிப்பு ஏற்படுவதனால் மிகவும் இக்கட்டனான நிலை உருவாகிவிடும்.
ஆகையால், இந்த விடயம் உரிய விதத்தில் அணுகப்பட்டு தீர்மானிக்கப்படாவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால்தான் இவ்வாறான விடயங்களை சரிவர தெளிவுபடுத்துமாறு எங்களது கட்சியின் செயலாளரூடாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதி விளக்கம் கோரியிருக்கின்றோம்.
சில கட்சிகளின் தலைமையகங்களிடம் கேட்டால் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியிடம் கேட்டால் அந்தக் கட்சி குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெறுமானால் அதன் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகின்றது. பல அங்கத்தவர்கள் தொகுதியில் அவ்வாறு நடக்குமானால் நீதி, நியாயம் கிடைக்காமல் போய்விடும்.
இவ்வாறு பிரச்சினைகளும், சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் நாங்கள் எல்லோரும் கேட்பது இந்த உள்ளுராட்சித் தேர்தலை தாமதமின்றி ஜனவரி மாதத்திலாவது நடாத்த வேண்டும் என்பதுதான்.
தேர்தலில் நாங்கள் வடகிழக்கில் தனித்தும் ஏனைய பிரதேசங்களில் இணைந்தும் போட்டியிவதற்கு கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் தீர்மானத்திற்கு இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்~ எதிர்ப்பு தெரிவிப்பது பற்றிய எனது கருத்து என்னவென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்பேன். அவர் அந்தக்குழுவில் உறுப்பினராக இருந்து எங்களுடன் 70 கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு அப்பொழுது தெரிவிக்காத எதிர்ப்பை இப்பொழுது வெளிப்படுத்துவது வேடிக்கையாக இருக்கின்றது.
நாட்டைப் பிரிப்பதற்கு நான் எந்தவிதத்திலும் உடன்படமாட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று தான் கூறிவருகின்றது என்றார்.