Top News

சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க சதி நடைபெறுகின்றது- அஜித் மான்னப்பெரும


கல்வியில் சிறந்து விளங்கும் போதே உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழலாம் எனவும், ஒரே நாட்டு மக்களாக இருந்து எமது நாட்டின் பெருமையை உலகில் ஓங்கச் செய்வோம் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
அடிப்படைவாதிகள் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கப் பார்க்கின்றனர். நாம் அதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் நாட்டின் கல்வி நிலைமையை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயற்பட்டு வருகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நோய் உட்பட பல்வேறு தேவைகளின் போது 2 லட்சம் ரூபா வரை நிதி உதவி கிடைக்கின்றது.
க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்தவர்களுக்கு “டெப் ரக” கணனிகளை அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. மாணவர்களின் உயர் படிப்புக்காக 8 லட்சம் ரூபா வரையிலான வட்டியில்லாக் கடனைக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கஹட்டோவிட்டாவில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய இரு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
பாடசாலை அதிபர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,  இஷாக் ரஹ்மான் எம்.பி., மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கம்பஹா  வலய கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Previous Post Next Post