ரி. தர்மேந்திரன்
வன்னி உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் கோட்டை அல்ல, அது றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த கே. காதர் மஸ்தானால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருக்க முடியாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து தேசிய காங்கிரஸில் சில வாரங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட அன்வர் முஸ்தபா வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் அரசியலில் பிரவேசித்த முதலாவது சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்?
பதில்:- நான் 2000 ஆம் ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானில் உள்ள ஹம்பாட் பல்கலைக்கழகத்துக்கு சென்று கணினி துறையில் முதுமாணி பட்டத்துக்கான உயர் கல்வியை நிறைவு செய்த பிற்பாடு நாட்டுக்கு திரும்பி வந்து கொழும்பில் தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியில் பணிப்பாளராக இணைந்தேன்.
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. விடுதலை புலிகளுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தது. முஸ்லிம்களும் சமாதான பேச்சு வார்த்தையில் தனியான தரப்பாக பங்கேற்க வேண்டும் என்கிற குரல்கள் அப்போது முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓங்கி ஒலித்து கொண்டிருந்தன. இவ்விடயங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் உருவாக்கம் பெற்று சமூக அக்கறை உடைய இளைஞர்கள் பலரையும் உள்ளீர்த்தது. இவர்களில் நானும் ஒருவன்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை நியாயமான முறையில் பெற்று கொடுக்கின்ற முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, வைத்திய கலாநிதி ஏ. எல். எம். ஜமீல், பொறியியலாளர் லத்தீப் ஆகியோரை கூட்டு தலைமையாக கொண்டு ஐக்கிய முஸ்லிம் உம்மாஆ 2003 ஆம் ஆண்டு தோற்றம் பெற்று செயற்பட தொடங்கியபோது நானும் இதில் என்னை இணைத்து கொண்டேன். 2004 ஆம் ஆண்டு மே மாதம் 28 இல் கொழும்பு தெமட்டகொட பள்ளிவாசலில் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் பேரணியை நானே தலைமை தாங்கி நடத்தினேன் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளனம், ஐக்கிய முஸ்லிம் உம்மாஆ ஆகியவற்றில் நான் இணைந்து தீவிரமாக செயற்பட்டது எனக்கு இருந்த சமூக அக்கறை காரணமாகவே ஒழிய எனக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்கிற நோக்கம் சிறிதளவும் இருந்து இருக்கவில்லை. மறுபுறத்தில் எனது சமூகம் சார்ந்த செயற்பாடுகள் காரணமாக நான் எனது உத்தியோகத்தை மாற்றி யூ. எஸ். எயிட் நிறுவனத்தில் கடமையாற்ற நேர்ந்தது. றிசாத் பதியுதீனை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே அறிமுகம் இருந்தபோதிலும் நான் யூ. எஸ். எயிட்டில் வடக்கு, கிழக்குக்கான மானியங்கள் முகாமையாளராக உயர் பதவி வகித்து கொண்டிருந்தபோதுதான் அவருடைய பிரதேச மக்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்னை அணுகினார். அடிக்கடி சந்தித்து பேசினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நான் இணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் ஒரு கட்டத்தில் என்னை கேட்க தொடங்கினார்.
2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடாக நான் போட்டியிட வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பஷில் ராஜபக்ஸ எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆயினும் இந்த அழைப்பை நிராகரித்த நான் முஸ்லிம் மக்களுக்கு றிசாத் பதியுதீன் மூலமாக நன்மைகளை பெற்று கொடுக்க முடியும் என்கிற ஒரேயொரு நம்பிக்கையில் அதே கால பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் சேர்ந்து இக்கட்சியின் இளைஞர் அமைப்பாளராகவும், சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு கட்சியை அம்பாறை மாவட்டத்தில் மக்கள் மயப்படுத்தியதுடன் சர்வதேச மட்டத்தில் விஸ்தரிப்பு செய்கின்ற செயல் திட்டங்களையும் முன்னெடுத்தேன். எனக்கு இருந்த தொடர்புகள் மூலமாக வெளிநாட்டு உதவிகளை பெற்று கொடுத்தேன்.
கேள்வி:- அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து தேசிய காங்கிரஸில் நீங்கள் இணைய வேண்டி வந்தது ஏன்?
பதில்:- எனது கல்வி புலம், அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகியன காரணமாக நான் அவரை அரசியலில் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து விட கூடும் என்கிற அச்சம் றிசாத் பதியுதீனுக்கு நாளடைவில் ஏற்பட்டு விட்டது. இதை நான் உணர்ந்தும், அறிந்தும் கொண்டவனாக கட்சிக்குள் எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்தி சில, பல வருடங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் செயற்பட்டேன். இருப்பினும் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக போட்டியிட அழைப்பு வந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக அதை நிராகரித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிட்டபோது அதே கட்சியை சேர்ந்த சக வேட்பாளர் ஒருவரால் அடிக்கடி பகிரங்கமாக சிறுமைப்படுத்தப்பட்டேன். இது குறித்து நான் றிசாத் பதியுதீனுக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டபோதிலும் அவர் எனக்கான நீதியை பெற்று தர முயற்சிக்கவே இல்லை. இருப்பினும் குறைந்த பட்சம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு இவர் மூலமாக ஏதேனும் அபிவிருத்திகள், வேலை வாய்ப்புகள், வாழ்வாதார உதவிகள் ஆகியவற்றை பெற்று கொடுக்க முடியும் என்கிற நப்பாசையில் அமைதியாக சகித்து கொண்டேன். ஆனால் அவ்விடயத்திலும் இவர் இரட்டை முகங்கள் உடையவராகவும், கபடம் மிகுந்தவராகவும் நடந்து கொண்டார்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு பாதகமான அரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கை உயர்த்தியது மாத்திரம் அல்லாமல் ரவூப் ஹக்கீம் கை உயர்த்தியதாலேயே அவர் கை உயர்த்தியதாக சிறுபிள்ளைத்தனமாக தெரிவித்தபோதே இவரால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்க போவதில்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்தவனாக தேசிய காங்கிரஸில் இணைந்தேன்.
கேள்வி:- முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியை நடத்துனராக கொண்டு இயங்குகின்ற தூய முஸ்லிம் காங்கிரஸ் ஏன் உங்கள் புதிய தெரிவாக அமையவில்லை?
பதில்:- தூய முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்ச்சி நிரல், உண்மையான நோக்கம் ஆகிய குறித்து எனக்கு எண்ணற்ற சந்தேகங்கள் உள்ளன. ஆகவேதான் நான் தூய முஸ்லிம் காங்கிரஸை நாடவில்லை.
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஏனைய முஸ்லிம் தலைவர்களை போல் அல்லாமல் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும், முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வை பெற்று கொடுப்பதிலும் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் செயற்பட்டு வருகின்றார். அத்துடன் இவரின் அரசியல் இனவாதத்துக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக இவருக்கு இரட்டை முகங்கள் கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு எதிராக ஆவேசமாக கருத்துகளை முழங்கி இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு சென்று, கண்டியில் சிங்கள மக்கள் மத்தியில் அன்பாக, அனுசரணையாக கதைப்பது போல நடிக்க தெரியாதவர் அதாவுல்லா. முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் சம்பந்தன் ஐயாவைகூட ஏசி திட்டி தீர்க்கின்ற றிசாத் பதியுதீன் தமிழர்களின் வாக்குகளை பெற தமிழர் பிரதேசங்களுக்கு செல்கின்றபோது தமிழர்களுடன் ஒட்டி உறவாடி நடிப்பது போல நடக்க அதாவுல்லாவுக்கு தெரியாது. ஆகவே அரசியல் வேடதாரி அல்லாத இவருடன்தான் ஒன்றாக பயணிக்கின்ற தீர்மானத்துக்கு நான் வர முடிந்தது.
கேள்வி:- அதாவுல்லா ஒரு இனவாதியாகவும், தமிழின விரோதியாகவும் சித்திரிக்கப்படுகின்றாரே?
பதில்:- அதாவுல்லா உண்மையானவர். ஏனையவர்களின் மனம் புண்படுமாக இருந்தாலும்கூட அவருடைய நிலைப்பாட்டை முகத்துக்கு நேராக பட்டென்று பேசுகின்ற பண்பு உடையவர். வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பது இவருடைய உறுதியான நிலைப்பாடு ஆகும். ஏனைய முஸ்லிம் தலைவர்களை போல வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களுக்கு ஒன்றையும், தமிழருக்கு இன்னொன்றையும் இவர் கூறவில்லை. இதனால்தான் தமிழர்களில் ஒரு தொகையினர் இவரை தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர். சில அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் இவரை இனவாதி என்றும் தமிழின விரோதி என்றும் காட்டி வேண்டும் என்றே அவதூறு பரப்பினர்.வடக்கு, கிழக்கு பிரிப்பு என்பது கிழக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்ல கிழக்கு தமிழர்களுக்கும் அவர்களை அவர்களே ஆள்கின்ற அதிகாரத்தை கொடுக்கின்ற விடயமே ஆகும்.
கேள்வி:- தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பாதிப்படைய செய்யும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்:- தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பு றிசாத் பதியுதீனை ரொம்பவே அச்சம் கொள்ள வைத்து உள்ளது. மக்களுக்கு வெளியில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் வன்னி ஒன்றும் றிசாத் பதியுதீனின் கோட்டை அல்ல. வன்னி றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த மஸ்தான் எவ்விதம் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்? கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எவ்விதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செல்வாக்கு சரிந்து கொண்டே செல்கின்றதோ அதே போல வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் செல்வாக்கும் குறைந்து கொண்டே செல்கின்றது. குறிப்பாக வன்னி முஸ்லிம்கள் இவர் மீது நம்பிக்கை இழந்து, அதிருப்தி அடைந்து மாற்று தலைமை ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பும், தொகுதி வாரி தேர்தல் முறைமையின் வருகையும் றிசாத் பதியுதீனின் மணல் கோட்டையை மாத்திரம் அல்ல அவரின் பல மன கோட்டைகளையும் தகர்த்து எறிந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.
கேள்வி:- இத்தருணத்தில் முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் கூறி வைக்க விரும்புகின்ற செய்தி என்ன?
பதில்:- கடந்த காலத்தில் வெளி பிரதேச அரசியல் தலைமைத்துவத்தை வீணாக நம்பி பெருந்தலைவர் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்த, கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்துக்கு இருந்த மகத்தான தலைவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அநியாயமாக இல்லாமல் செய்து விட்டோம். இந்த பிழையை நாம் எதிர்காலத்தில் கட்டாயம் சரி செய்தல் வேண்டும். அத்துடன் சில சலுகைகளுக்காக கடந்த காலத்தில் வாக்களித்த நிலைமைகளை மாற்றி சமூகத்துக்கு குரல் கொடுக்க கூடிய அரசியல் தலைமைத்துவத்தை வருங்காலத்தில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றேன்.
மேலும் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்கள்கூட நிதானமாக சிந்தித்து அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது உகந்ததாக அமையும். மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும், நல்லாட்சியின் உருவாக்கத்துக்கும் நானும் பங்களிப்பு செய்து இருந்தேன். ஆனால் இந்த நல்லாட்சி வெற்றிகரமான நல்லாட்சியாக இல்லை. எனவே இந்நாட்டு பெரும்பான்மை சமூகத்தின் அதிகப்படியான செல்வாக்கையும், அதே போல பெரும்பான்மை சமய தலைவர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்று இருக்கின்ற அரசியல் சக்தியுடன் நாமும் இணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புகள் குறித்து சாதகமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் மக்கள் உள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.