Top News

முஸ்லிம்களாக ஒன்றிணையுங்கள்; சாய்ந்தமருது-கல்முனை முறுகல்!



கிழக்கு மாகாணத்தின் கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகளை முன்வைத்து இரு தினங்களுக்கும் மேலாக போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில் மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான விரிசல் நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி கடந்த திங்கட் கிழமை முதல் தொடர் போராட்டம் நடந்து வருகின்றது. கடையடைப்பு, வீதி மறியல், பொதுக் கூட்டங்கள், ஹர்த்தால் என இப் போராட்டம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த போதிலும் எந்தவிதமான சாதகமான பதில்களும் வழங்கப்படவில்லை. மறுபுறம் கல்முனையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி கல்முனை நகரில் நேற்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றும் நாளையும் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முன்னிறுத்திய இந்தப் போராட்டமானது கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்குமிடையில் நீண்ட கால பகையை தோற்றவித்துவிடுமோ என அஞ்சுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எனினும் இதனை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கான ஆரோக்கியமான நகர்வுகள் எதுவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
இந்த விவகாரம் இவ்வளவு தூரம் வருவதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதேச அரசியல்வாதிகளும் தான் காரணம் என இப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக பிரதேச மக்களுடன் அரசியல்வாதிகள் எவ்வாறு நேரடிப் பேச்சுக்களில் ஈடுபடப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
மறுபுறம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் மற்றம் சந்திவெளி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தமிழ் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள விவகாரம் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பில் பொலிசாரும் தமிழ் , முஸ்லிம் தலைமைகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இன முறுகல்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மேலும் சில தினங்களுக்கு தமிழ் பகுதிகளில் முஸ்லிம்களும் முஸ்லிம் பகுதிகளில் தமிழர்களும் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இதற்கிடையில் வவுனியா நகரிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை அகற்றக் கோரி வவுனியா நகர ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக தமிழ் இளைஞர்கள் சிலர் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப் பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அப் பகுதி பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்றும் ஒரு சிறு குழுவினரே இதனை மேற்கொள்வதாகவும் பிரதேச முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்குள்ளும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலுமாக கடந்த சில தினங்களாக முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இவை தொடர்பில் முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் மார்க்க தலைமைகள் உடன் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும். இன்றேல் மீண்டும் இப் பிரதேசங்களில் நிலைமை மோசமடையவும் பிரதேச, இன முரண்பாடுகள் தோற்றம் பெறவும் கூடும். அதற்கு முன்னர் அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
Previous Post Next Post