Top News

அஸாத் ஸாலியுடன் ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் இரகசியப் பேச்சு!



முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலிக்கும் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று கொழும்பில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அஸாத் ஸாலியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச்சந்திப்பில், ஜனவரியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணியமைத்து களமிறங்குவது தொடர்பிலேயே இரு தரப்பினராலும் தீவிரமாக ஆராயப்பட்டது எனத் தெரிய வருகின்றது.
ஏற்கனவே முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இணைய பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், அது இன்னும் சாத்தியமாகாத காரணத்தாலேயே தற்போது அந்த வெற்றிடத்துக்கு அஸாத் ஸாலியை கொண்டுவரும் நோக்கிலேயே இந்தப் பேச்சில் மேற்படி முஸ்லிம் கூட்டமைப்பானது ஈடுபட்டதாக அறிய முடிகின்றது.

எனினும், நேற்றைய சந்திப்பின் போது இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது, இவ்விடயம் குறித்து இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அடுத்த வெள்ளிக்கிழமையன்றே இருதரப்பின் சகல முக்கியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்தது.

ஆனால், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கவே தாம் இதுவரையில் முடிவு செய்துள்ளதாகவும், கூட்டணி அமைத்தாலும் தமது கொள்கைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இணங்கும் தரப்புடனேயே அது சாத்தியமாகும்என்று அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post