Top News

மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்



“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று,  அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த  ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றாரா என வினவினார்.
அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்,
“பிளவுபட்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார். ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக போட்டியிடுவதற்கே, எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முயற்சிகளில், அமைச்சர் சு​சில் பிரேமஜயந்த ஈடுபட்டுள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்த சில கருத்து முரண்பாடுகளால்தான்  கட்சியிலிருந்து வெளியேறவேண்டியேற்பட்டது” எனவும் அமைச்சர் தயாசிறி மேலும் தெரிவித்தார்.
குறுக்கிட்ட மற்றுமோர் ஊடகவியலாளர், “ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில், தேர்தல் சின்னம் எதுவாக இருக்கும்?” என்று வினவுகையில், “அது அனைவரும் ஒன்றிணைந்ததன் பின்னர் தீர்மானிக்கப்படும்” என்று பதிலளித்தார்.
Previous Post Next Post