Top News

தலைவர் அஷ்ரபுக்கு வரலாற்று கௌரவம்; அதிகம் பகிருங்கள் - LETS SHARE



நாடாளுமன்ற முதலாம் மாடி சுவரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக்கும், அவர்களது சமூகத்துக்கும் பெருஞ்சேவையாற்றிய நான்கு இனங்களையும் சேர்ந்த பெருந்தலைவர்களது ஓவியங்களுடன் சேர்த்து பெருந்தலைவர் M.H.M அஷ்ரஃப் அவர்களது ஓவியத்தையும் காட்சிக்கு வைக்குமாறு நானும், ஹஸனலியும் இன்று சபாநாயகர் கௌரவ கருஜயசூரியவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தோம்.

இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோன்றிய 70 ஆவது ஆண்டையொட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாமிருவரும் மேற்படி கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்து அவருடன் பேசினோம்.

தலைவர் அஷ்ரஃப் இந்நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் சேவை புரிந்த வரலாற்று நாயகனாகும்.ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ள - சேர் பொன்னம்பலம், கலாநிதி C.W.W கன்னங்கர, E.W பெரேரா, முஹம்மத் மாக்கான் மாக்கார், M.C அப்துர்ரஹ்மான், சேர் பொன்னம்பலம் ராமநாதன், A.E குணசிங்ஹ, வைத்திய கலாநிதி S.A விக்கிரமசிங்ஹ, G.G பொன்னம்பலம், கலாநிதி N.M பெரேரா, பிலிப் குணவர்தன, கலாநிதி T.B ஜாயா, S. தொண்டமான் ஆகிய தலைவர்களை ஒத்தவரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரபும் ஆகும். இறுதியாக ஓவியம் வைக்கப்பட்டுள்ள தொண்டமான் அவர்கள் இறந்து 18 வருடங்களாகின்றன. இவரது படம் வைத்து மலையக தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டு சில வருடங்கள் கடந்துவிட்டன. எமது தலைவர் மரணித்து 17 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அஷ்ரஃப் அவர்களது படத்தையும் குறித்த அந்த இடத்தில் வைப்பதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் வழிகாட்டியை கௌரவிக்கவேண்டும் எனவும், இதன்வாயிலாக நாடாளுமன்றம் உள்ளளவும் அதனைப் பார்வையிடச் செல்லவோர் இப்படியொரு தலைவர் வாழ்ந்தார் என்பதை நினைவுகூர வாய்ப்பு ஏற்படும் என்றும் சபாநாயகரிடம் எடுத்துக் கூறினோம்.

ஏற்கனவே சில முஸ்லிம் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருப்பினும், அவர்கள் எல்லோரும் தேசியக் கட்சிகளின் அங்கத்துவத்தின் ஊடாக சேவையாற்றினார்கள் ஆனால், அஷ்ரஃப் மட்டுமே தனிக்கட்சி ஒன்றை தாபித்து தேசிய அரசியலில் ஒரு புதிய முஸ்லிம் பரிமாணத்தை ஏற்படுத்திய தலைவர் என்றும் எடுத்துக் கூறினோம்.

சபாநாயகர் எமது கோரிக்கையின் நியாயங்களை ஒப்புக்கொண்டு, எமது கடிதத்தை அவ்விடத்தில் வைத்தே நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

தலைவர் அஷ்ரஃப் இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றுக்கு 42 வருடங்களான போது 1989 இல், தனது தனி முஸ்லிம் கட்சியினூடாக முதன் முதலில் முஸ்லிம் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். தேர்தல் முறையில் மாற்றம் நிகழ்த்தப்படும் இக்காலகட்டத்தில் முஸ்லிம் தனிக்கட்சி அரசியல் கேள்விக்குறியாகி, மீண்டும் தேசியக்கட்சிகளின் ஊடாக முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் அழிக்கப்படும் ஆபத்து தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த 70 வருடகால நாடாளுமன்ற வரலாற்றில் முஸ்லிம் தனித்துவ அரசியல் வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.

-பசீர் சேகுதாவூத்

Previous Post Next Post