கொஹுவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஆதரவற்றோர் இல்லத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர், கொஹுவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், இரண்டு தடவைகளும் விளக்கமறியல் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை 7ஆம் திகதி, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் காலை 9 மணிக்கு இந்தக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த தினத்தன்று, இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நான்காவது தடவையாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.