ஈராக்கில் குர்திஷ் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஈராக் அரசை எதிர்த்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் நடந்துவரும் சண்டைகள் காரணமாக பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இங்கு நடைபெறும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கின் குர்திஷ்தான் பகுதியின் தலைநகரான எர்பில் நகரில் அமைந்துள்ள ஒரு அகதிகள் முகாமில் நேற்றிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் கார் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அம்மாநில மேயர் தெரிவித்துள்ளார். எர்பில் நகரில் உள்ள அகதிகள் முகாம்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.