எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெப்பில் அல்-சில்சிலா என்ற இடத்தில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக்காக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதோடு அந்த உடலை பதப்படுத்துவதற்காக சுற்றப்பட்டிருந்த துணியுடன், மரச் சவப்பெட்டியின் எஞ்சியுள்ள கரிமப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இடத்தில் மேற்கொண்டு சில கல்லறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஆறுலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைக்கான சவப்பெட்டி, மற்றொன்றில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதான சவபெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மண்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது கல்லறையில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதாகும். சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்ட 35 சென்டி மீட்டர் உயரமான கால் மற்றும் வலது கையிழந்த தலையற்ற பெண்ணின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அணிந்திருந்த உடையானது, கிரேக்க பெண் கடவுளான ஆர்டேமிஸ் அணிந்திருக்கும் உடை போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எகிப்தின் 18-வது ராஜவம்சத்தில் (1549/1550- 1292 கிமு) இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
'தட்மாசிட்' என்றழைக்கப்படும் எகிப்தின் 18-வது ராஜவம்ச காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுதி சடங்கு முறைகள், அக்காலத்து மக்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் மத வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவும் என ஸ்வீடன் ஆராய்ச்சி குழுவின் தலைவர் கூறினார்.
கெப்பில் அல்-சில்சிலா தளத்தில் இதுவரை 69 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாதி கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். பழங்காலத்தில் ஏற்கனவே பாதி கல்லறைகள் சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் முதல் இடைநிலை காலத்தின் தேதியிட்ட கல்லறையின் ஒரு பகுதியை கொம் அம்போ நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எகிப்து-ஆஸ்திரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. மண்- செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட கல்லறைகளில், மண்பாண்டங்கள் மற்றும் பல இறுதி சடங்குக்கான பொருட்கள் இருந்ததாக அந்த குழுவின் தலைவர் கூறியுள்ளார்.