Top News

ஜனவரி 31ம் திகதிக்குள் தீர்வு தரப்படா விட்டால் வீதியிலிறங்கி போராடுவோம் – தவ்ஹீத் ஜமாஅத்



உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்வருகிற தேர்தல்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் அல்லாமல் இதுவரை காலம் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைப்படியே நடைபெற வேண்டும். என்பதுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் யாப்பை கொண்டுவர மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களை வீதியில் இறக்கி இவற்றுக்கு எதிராக போராடுவோம் என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டது. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் சிங்கள மொழியில் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் கருத்து வெளியிட்டார்கள்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவை முஸ்லிம்களின் முதுகில் குத்தும் விதமாக ஏமாற்று தந்திரத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட ஒன்று என்பதுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த முஸ்லிம்களை தெட்டத் தெளிவாக ஏமாற்றிய ஒரு காரியமுமாகும்.

இதுவரை இருந்து வந்த முஸ்லிம்களின் வாக்கு பலத்தை செல்லாக் காசாக மாற்றும் முயற்சியாகவே மேற்குறித்த தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தை மைத்திரி-ரனில் கூட்டரசாங்கம் கொண்டு வந்தது என்பதுடன் குறித்த சட்ட மூலங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தை முஸ்லிம்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை இவ்வரசு கொண்டு வந்த முறையை வைத்தே அறிந்து கொண்டு விட்டார்கள். இனியும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. ஆகவே புதிய அரசியல் யாப்பை கைவிடுவதாக உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற மிக ஆபத்தான முன்மொழிவுகள் எல்லாம் குறித்த இடைக்கால அறிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன், இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றரை மாதங்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 26.11.2017ம் தேதியன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான மக்களை ஒன்றினைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

முஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, முஸ்லிம்களின் வாக்கு பலத்தை இல்லாமலாக்கும் தந்திரத்தை இனியும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்குள் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் முஸ்லிம்களை வீதியில் இறக்கி தவ்ஹீத் ஜமாஅத் போராடும் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
Previous Post Next Post