தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வரட்சி காரணமாகவே தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கிராமப்புறங்களில் தேங்காய்க்கு பாரியளவில் நெருக்கடியில்லை. எனினும் நகரப்புறங்களிலேயே அது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
தென்னந்தோப்புகளுடன் தொடர்புடைய அமைச்சுகள் மூன்று உள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேங்காயை கொள்வனவு செய்து சதொச ஊடாக 65 ரூபாவுக்கு விற்பனை செய்கிறோம். எனினும் அதற்கு நிலவும் கேள்வி போதுமானதாக இல்லை.
எனவே ஜனாதிபதி தலைமையில் நாளை மாலை (இன்று) வாழ்க்கைச் செலவுகளை ஆராயும் குழு கூடவுள்ளது. அதன்போது தேங்காயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.
மேலும் தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கவுள்ளோம். அதன்படி கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக அமையவுள்ளது. அதனை வர்த்தமானி மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.