பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் இன்று ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிர் அலி என்ற பகுதியில் சென்றபோது ராணுவ வாகனம் திடீரென வெடித்து சிதறியது. தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் அந்த பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்ததும், ராணுவ வாகனம் அந்த பகுதியை அடைந்ததும் ரிமோட் மூலம் வெடி குண்டை வெடிக்க செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.