ஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அனைத்து துறைகளிலும் உலகம் தழுவிய மானிட சமுதாயத்துக்கு முன்னுதாரண புருஷராக உள்ளார் என்று மீலாத் வாழ்த்து செய்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
இவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நல்ல கணவராக, சிறந்த வர்த்தகராக, மாபெரும் வீரராக, உன்னத தலைவராக… என்றெல்லாம் வாழ்ந்து காட்டினார். நாம் எல்லோரும் இவர் காட்டிய பாதையில் நடக்க குறைந்த பட்சம் இந்நன்னாளில் உறுதி பூணல் வேண்டும். இவருடைய பூரணத்துவ ஆளுமைகளில் ஒரு பங்கையேனும் அடைய நாம் சபதம் எடுக்க வேண்டும்.
குறிப்பாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை போன்ற உன்னத தலைவர்களே எமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தேவைப்படுகின்றனர். அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, உண்மை, கொள்கை பற்று, இரக்கம் போன்ற மேன்மையான பண்புகள் உன்னத தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அவருடைய உயர்ந்த தலைமைத்துவம் மூலமாக உணர்த்தினார்.
குறிப்பாக சூரியனையும், சந்திரனையும் சேர்த்து பிடித்து அவருடைய கைகளில் தருகின்றபோதிலும் அவர் கொண்டிருக்கின்ற கொள்கையை விடவே மாட்டார் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொல்லிய கொள்கைப் பற்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் அமைய பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறான கொள்கை பற்று அவர்களிடம் உள்ளதா? என்று குறைந்த பட்சம் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் சுய விமர்சனம் செய்து பார்த்து அவர்களை செப்பனிட வேண்டிய தருணம் இது ஆகும்.
இதே நேரம் எமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் அப்பழுக்கின்றி உழைக்க கூடிய நல்ல உன்னத தலைவர்களை வருங்காலத்தில் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இந்நன்னாளில் கேட்டு கொள்கின்றேன்.