ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளும் ஒன்று. எண்ணெய் வளம் மிக்க இந்நாடுகளில் விண்வெளி குறித்த ஆராய்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்பவதற்கான திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தும் தெரிவித்துள்ளதாவது:-
அடுத்த 5 ஆண்டுகளில் 4 ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்ப தொடக்கமாக அமையும். இந்த முயற்சி எங்கள் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் முதல் இடம் பிடிக்கும் வகையில் எங்களின் முயற்சி அமையும்.
எங்கள் நாட்டு மக்கள் தடைகளை தகர்த்து எரிவார்கள். இந்த திட்டத்தில் பணியாற்ற விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணம் செய்துள்ளனர். அவர்களிலிருந்து குறிப்பிட்ட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். கடைசியாக தேர்ந்தெடுக்கப்படும் 4 பேர் ஐக்கிய அரபு நாடுகள் சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தும் தெரிவித்திருந்தார்.
மேலும், 2021 ம் ஆண்டிற்குள் ஹோப் என்ற பெயரில் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்ய அதன் சுற்று வட்டத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதே போல் 2117 ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் 'அறிவியல் நகர்' ஒன்றை உருவாக்கி அதில் மக்களை தங்க வைக்கும் திட்டம் வைத்திருப்பதாக யு.ஏ.இ. கூறியது குறிப்பிடத்தக்கது.