சர்க்கரை நோயும், உணவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர் குருதி அழுத்தமும் தான் சிறுநீரகப் பாதிப்பிற்கும், சிறுநீரக கோளாறுகளுக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில் தற்போது உலக வெப்பமயமாதல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களாலும் சிறுநீரக கோளாறுகள் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எம்முடைய உடலில்உள்ள நீர்ச்சத்தில் சமச்சீரின்மை ஏற்படும் போது, உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகள் உண்டாகும்.
அதனால் வெயிலில் கடினமாக உழைக்கும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் தண்ணீரைப் பருகவேண்டும். அதே சமயத்தில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற அல்லது சுகாதாரமற்ற தண்ணீரைத்தான் அருந்துகிறார்கள். இதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும்.
அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியவர்கள், கழிவறை வசதி இல்லாத பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என பலர் இதன் காரணமாகவே போதிய அளவிற்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதன் காரணமாகவும் அவர்களின் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. அதனால் சிறுநீரக பாதிப்பு வராமல் தடுப்பதற்குரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் முழுமையான விழிப்புணர்வுடன் மேற்கொள்ளவேண்டும்.
சிறுநீரக பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் அதற்குரிய சிகிச்சை உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
டொக்டர் பி சங்கர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்