ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்
சமூகத்தினுடைய எதிர்கால மற்றத்திற்குரிய தூண்களாக மாறுவதற்கு பாலர் பாடசாலைகள் அடித்தளமாக இருக்கின்றதுடன் எமது நாட்டிலே பாலர் பாடசாலைகளினுடைய விருத்திகள் மிகக் குறைவாக காணப்படுகின்றது என்றும் வெளிநாடுகளிலே மிக முக்கியமானதாக பாலர் பாடசாலைகள் இருக்கின்றதுடன் அதற்கென்று விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஆளணிகளைக் கொண்டு அந்தப் பாலர் பாடசாலைகளை இயங்க வைக்கின்றார்கள் என்று ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளரும் செயலாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஏறாவூர் மீராகேணி அல் பக்தாத் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு நேற்று (25) எஸ்.எம்.முபாறக் தலைமையில் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது பிள்ளைச் செல்வங்களை பாலர் பாடசாலைக்கு விட்டால் எமது பொறுப்புக்கள் முடிகிறது என்று பெற்றோர்கள் எண்ணி விடக்கூடாது. 24 மணி நேரங்களில் 2 அல்லது 3 மணி நேரங்கள்தான் பாலர் பாடசாலையில் எமது பிள்ளைகள் படிக்கப்போகின்றார்கள். ஏனைய 21 மணி நேரங்களில் உங்களது கண்கானிப்பின் கீழ் இருக்கப்போகின்றது. அந்தப் பிள்ளைகள் நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ மாறுவது பெற்றோரின் கையில்தான் இருக்கின்றது.
பிள்ளைகளுடைய ஆரம்பக் கல்வி பாலர் பாடசாலையாக இருக்கின்றது. பாலர் பாடசாலைக் கல்வியானது பாடசாலையில் தொடங்கி பல்கலைக் கழகம் வரை அவர்களை கொண்டு சென்று இன்னும் பல உயர் படிப்புக்களைத் தொடர்வதற்கும் அடித்தளமாக பாலர் பாடசாலையின் கல்வி காணப்படுகின்றது.
எமது பிள்ளைகளுக்கு எவ்வளவுதான் செலவு செய்தாலும், அவர்கள் கல்வி கற்றதன் பின்னர் பாரிய நிருவனத்திற்கு விட்டாலும் பெற்றோருடைய கண்காணிப்புதான் மிக முக்கியமானதாக அமைகின்றது. இவ்வாறு கண்காணிக்கப்படுகின்ற போதுதான் சமுகத்தில் மார்க்கப்பற்றுள்ள நல்ல பிரயோசனமான சமுகத்தின் அபிவிருத்திகள் மற்றும் சமுகத்தின் கலாச்சார விழுமியங்களை பேனுகின்ற பிள்ளையாக மாறுவார்கள்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டோம் கடமை முடிந்துவிட்டது ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் பெற்றோர்கள் இருந்து விடக்கூடாது. எமது பிள்ளை யாருடன் இருக்கின்றான் எங்கு போகின்றான், எதைப்பார்க்கின்றான் என்று பார்க்காமல் இருப்பதால் தான் எமது பிள்ளைகள் பிழையான வழிகளில் செல்ல வழிகுக்கின்றது. இதற்கு முழுக் காரணமாக பெற்றோர்களாகிய நாமே இருந்து விடுகின்றோம்.
எனவே இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தி அவர்களை உரிய முறையில் கண்காணித்து ஒரு சமூகப் பற்றுள்ள பிள்ளையாக மாற்றுவது எமது பெற்றோர்களுடைய கையில்தான் இருக்கின்றது என்றார்.