இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், சுவீடன் விஞ்ஞானி அகமது ரேஸா ஜலாலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஈரான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஈரான் அணு விஞ்ஞானிகள் நான்கு பேர் 2010லிருந்து 2012வரை படுகொலை செய்யப்பட்டனர். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்கும் நோக்கில் இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பு இந்த படுகொலைகளை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த அமைப்புக்கு விஞ்ஞானிகள் குறித்த தகவலை வழங்கியதாக சுவீடன் மற்றும் ஈரானில் இரட்டை குடியுரிமை பெற்ற மருத்துவ விஞ்ஞானி அகமது ரேஸா ஜலாலியை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு இரு விஞ்ஞானிகள் குறித்த தகவலை வழங்கியதை அவர் ஒப்புக் கொண்டார், எனினும் பொலிசார் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்திய நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எப்போது அத்தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.