சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை அமைப்பது தொடர்பில், அரசாங்கத் தரப்பினரே தவறிழைத்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டதுடன், இந்தப் பிரச்சினை பற்றி எரிவதற்கு யார் காரணம் என்பதில் அவருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
2015ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சாய்ந்த மருது மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து வெளியிடுகையில்,
சாய்ந்தமருதுக்கு தனியான சபை ஒன்றை அமைத்துத் தருவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா, 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி உறுதியளித்திருந்தார். அதேபோல் கல்முனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி, சாய்ந்தமருதுக்குத் தனியான சபையை உருவாக்குவதாக பிரதமர் உறுதியளித்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீமும் உறுதியளித்தார்.
எனினும் தேர்தலின்போது உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த மக்கள் இன்றும் (நேற்றும்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக பிரதேச சபை ஒன்று உருவாக்கப்படும் போது, பூகோளவியல் அமைப்பு, மக்கள் செறிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். இங்கு முடியாது என்று சொல்வது வேறு விடயம், உறுதியளித்துவிட்டு நடைமுறைப்படுத்தாதது வேறு விடயம் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது விடயத்தில் நாம் நீண்டகாலத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். எரியும் பிரச்சினையில் வைக்கோலைப் போடுவதற்கு முயற்சிக்காதீர்கள். தயவு செய்து இந்த விடயத்தை அரசியல் மேடையாக்கிப் பேசுவதைத் தவிருங்கள் என்றார்.
விஜித ஹேரத்: சாய்ந்தமருது பிரச்சினைக்குத் தீ வைத்தது நீங்கள் தான். நீங்களும் பிரதமரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
பைசர்: அனைத்துத் தரப்பினருக்கும் பொருத்தமான வகையிலேயே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். நீங்கள் இதனை மேலும் பற்றவைக்காதீர்கள். இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான தீர்வை முன்வைப்போம்.
விஜித: நாங்கள் பற்றவைக்கவில்லை. இப்போது உங்கள் தரப்பு தான் பெற்றோலையும் ஊற்றியிருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் நல்ல விளையாட்டு ஒன்றை ஆடினீர்கள். இப்போது, சுதந்திரக்கட்சித் தரப்பு, மைத்திரி தரப்பு எல்லோரும் மாட்டிக்கொண்டீர்கள். வழக்குத் தாக்கல் செய்து அதனை மீளப்பெறும்போதே யார் தவறிழைத்தார்கள் என்பது வெளிப்படை.
பைசர்: நான் ஒன்றைக் கூறிவைக்க விரும்புகிறேன். உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தயாரிக்கும்போது உங்களைப் போன்ற சிறு கட்சிகளின் அபிப்ராயங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்று அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
விஜித: நாம் சிறு அணியினர் தான். ஆனால் நாம் முன்வைப்பது சிறு அபிப்ராயங்கள் அல்ல. அவை இந்த நாட்டுக்கான தேசிய அபிப்ராயங்கள். நாங்கள் தவறிழைக்கவில்லை. நீங்கள் 10-15 தடவைகள் தவறிழைத்து தற்போது அவற்றைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்றார்.
இதேவேளை, இதற்கு முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சாய்ந்தமருதுக்கு தனியான சபை அமைப்பதை தாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.