முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சப்படலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த இரண்டு கட்சிகள் தொடர்பிலும் எவ்விதமான அச்சமும் கிடையாது. ஆகவே மக்களிடம் சென்று தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான பங்களிப்பை கூறுங்கள். மக்களின் ஆதரவு கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உத்தேச உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கட்சியை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது குறித்து சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. அதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை போட்டியிடும் எதிர் தரப்புகள் எவ்வாறான நிலைமைகளில் உள்ளனர் , அவர்கள் யார் என்பது தொடர்பில் அறிய வேண்டி இருந்தது. ஆனால் இன்று அந்த தகவல்கள் வெளிவந்து விட்டன. இனி ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை செலவு விவகாரம் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் உள்ள பொதுவான சவாலாகும். மேலும் தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கட்சி தாவுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாத இருவர் சுதந்திர கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக பிரதமரிடம் இதன் போது தெரிவிக்கப்பட்டது .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அச்சப்படலாம். ஐக்கிய தேசிய கட்சிக்கு அந்த அச்சப்பாடு கடுகளவும் இல்லை. தனிநபருக்குள்ள குறிப்பிட்டளவு வாக்கு வங்கி ஒரு போதும் அதிகரிக்காது. ஆகவே புதிய கூட்டணிகள் எவ்விதமான சவாலையும் எமக்கு ஏற்படுத்தாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறு இருக்க கிராம மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்புகளும் அனைத்து உள்ளுராட்சிமன்றங்களிலும் கட்சியின் வெற்றிக்காக செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அதே போன்று மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களில் பிரதமர் கலந்துக்கொள்ள உள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 8 ஆயிரம் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது. பங்காளி கட்சிகளுடனான இணக்கப்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் உட்சாகமாக தேர்தலில் போட்டியிட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.