எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் அனைத்தும் நிறைவு. இன்று முதல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வேட்பாளர்கள் கடும் பிரசாரப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
அதுமட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமயைிலான பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் நாடளாவிய ரீதியில் கடும் பிரசாரப்பணிகளை முன்னெடுக்கவுள்ளன.
அந்தவகையில் நாளை முதல் தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளது. இம்முறை புதிய தேர்தல் முறை என்பதால் அதுதொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக இந்தத் தேர்தல் முறை ஊடாக 60 வீதம் தொகுதிமுறைமையிலும், 40 வீதம் விகிதாசார முறைமையிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளதுடன் குறித்த வேட்பாளர் அந்த தொகுதியில் மட்டுமே பிரசாரப் பணியில் ஈடுபடுவார். ஆனால் விகிதாசார முறைமையில் போட்டியிடுபவர்கள் குறித்த உள்ளூராட்சிமன்றப் பிரதேசம் முழுவதிலும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
கொழும்பு மாநகரசபையைப் பொறுத்தவரையில் தொகுதி அடிப்படையில் 66 உறுப்பினர்களும் விகிதாசார முறைமையில் 44 உறுப்பினருமாக 110 உறுப்பினர்கள் இம்முறை புதிய தேர்தல் முறைமையின் ஊடாக தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.