Top News

இலங்கையில் தனி இராச்சியம் உருவாகும்? கோத்தபாயவின் புதிய போராட்டம்



இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்கே அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசுகின்றனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற எலிய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வின் மூலம், தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது, வேறு இராச்சியமொன்றை உருவாக்கவே அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசுகின்றனர்.

68 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் இலங்கை முழுவதும் வாழ்கின்றார்கள். இந்த நிலையில், குறித்த பிரதேசத்துக்கு மட்டும் அதிகாரத்தைப் பகிர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைக் காண்பது? அவர்களது இரகசிய எண்ணம் என்னவென்பது இதனூடாக தெளிவாகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து இன மக்களும் கௌரவமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கவும், நாட்டைப் பிரிப்பதற்கு எதிராகவுமே எமது இந்த போராட்டம் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post