Top News

கோடிக்கணக்கில் வரி செலுத்தியும், நமது பிரதேசங்களுக்கான சேவைகள் பூரணமாகக் கிடைக்கவில்லை!



-NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஸஃப்ரி அப்துல் வாஹித்-

திஹாரி, கஹடோவிட, உடுகொட, ஓசட்வத்த போன்ற பிரதேச மக்கள், மாதாந்தம் கோடிக்கணக்கான ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்ற போதும், கடந்த காலங்களில் அத்தனகல்ல பிரதேச சபையின் சேவைகள், இப்பிரதேச மக்களுக்கு பூரணமாகக் கிடைக்கவில்லை என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) தலைமைத்துவ சபை உறுப்பினர் ஸஃப்ரி அப்துல் வாஹித் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், அத்தனகல்ல பிரதேச சபை பெருமளவு வருமானத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு உள்ளுராட்சி மன்றமாகும். ஆனால், அத்தனகல்ல பிரதேச சபையின் சேவைகளை முழுமையாகப் பெறும் வாய்ப்பு இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கப் பெறாமை இப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பாதைகளை சீரமைப்பதும், வீதி விளக்குகளைப் பொருத்துவதும் மட்டுமே உள்ளுராட்சி மன்றங்களின் பொறுப்பு என்பது போல் ஒரு மாயையே இதுவரையிலும் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தமக்கு பூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று மக்கள் இப்போது கோரத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற சமூகக் கடமையே, NFGG இப்பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். இந்த உள்ளுரட்சி மன்றத் தேர்தலில், பிரதேச சபையின் சேவைகளை பூரணமாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் மற்றும் மக்களுக்கு விசுவாசமான பிரதிநிதிகளைப் பெறுவதற்கு NFGG க்கு மக்கள் வாக்களிப்பர் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது.

NFGG யின் கொள்கைகளை விளங்கி ஏற்றுக்கொண்ட இளம் வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்துள்ளமை அத்தனகல்ல பிரதேசத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் – என்று தெரிவித்தார்.
Previous Post Next Post