கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்கல்லை தகர்த்து அதனைக் கடலில்போட்டுள்ளனர். அவ்விடயம் சீனாவிற்குத் தெரியவந்தால் அந்நாடு இலங்கையுடனான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமீதுள்ள பீதியினாலேய இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. இது போன்ற செயற்பாடுகளினால் இலங்கைக்கும் வெளிநாடுகளுக்குமிடையில் உள்ள உறவில் பாரிய விரிசல் ஏற்படுவதற்கும் இடமுண்டு. ஆகவே இலங்கையிடம் தற்போது நிலையான வெளிநாட்டுக்கொள்கை இல்லை என்றே கருதவேண்டியுள்ளது.
எனவே துறைமுக நகரத்திட்ட அடிக்கல் அகற்றப்பட்டமைக்கு எதிராக சீனா அரசாங்கம் எவ்வாறான நடிக்கை மேற்கொள்ளும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆயினும் அந்நாடு குறித்த விடயம் தொடர்பில் பதில் வழங்குமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கான தலைமையும் தற்போதில்லை.சீனாவும் எமது நாட்டுடனான உறவைத் துணை்டிக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்லும் என்று தெரியாது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் இம்முறை நத்தார் பண்டிகையைக்கூட மக்கள் உரிய வகையில் கொண்டாடமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டரை வருட ஆட்சியில் அரசாங்கம் நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை. எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டபின்னர் கிராமமட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆகவே அவை வெறும் அரசியல் நோக்கம் கொண்ட அபிவிருத்திகளாகும்.
இது விடயத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தது. எனினும் தற்போது அக்குழுக்களும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.