(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எனது உயிரை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக சுயேட்சைக்குழுவில் 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர், அதீப் பௌண்டேசன் தலைவர் முஹர்ரம் பஸ்மீர் தெரிவித்துள்ளார்.
தமது ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (28) வியாழக்கிழமை தனது அலுவலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய
அவர் மேலும் தனதுரையில் குறிப்பிட்டவை வருமாறு,
நாங்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்ட சமுகமாக வாழ முடியாது. எங்களை நாங்களே ஆளுகின்ற எமது மக்களின் குறைகளை நாங்களே தீர்த்து வைக்கின்ற ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உரிமைகளை வென்றெடுப்போம். அதன் பின்னணியில் என்ன தடைகள் வந்தாலும் நாம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
நான் எவ்வித அதிகாரமும் இல்லாமல் எமது பிரதேச மக்களுக்கு பல்வேறு சமுக சேவைகளை எனது சொந்தப் பணத்தில் செய்திருக்கின்றேன். அப்போது எனக்குள் எவ்வித அரசியல் நோக்கமும் இருக்கவில்லை. ஆனால் எமது சாய்ந்தமருது மக்களின் அவல நிலைகண்டு எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் புத்திஜீவிகளும் என்னை இத்தேர்தலில் களமிறங்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கிணங்க சாய்ந்தமருது பள்ளிவாயலின் வழிகாட்டுதலில் நான் இன்று மக்கள் முன்வந்திருக்கின்றேன். நிச்சயமாக எனது வட்டார மக்கள் என்னை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நான் அதிகாரத்துடன் அம்மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன். அதனுாடாக இங்கு உரிமை அரசியல் செய்வதாக மக்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு நாம் இணைந்து சிறந்த பாடத்தை புகட்டுவோம்.
கடந்த பல வருடகாலமாக முஸ்லிம்களின் ஏகபோக கட்சிகள் என்று தங்களை மார்தட்டி பேசுகின்ற கட்சித்தலைவர்கள் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுகின்ற நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையை தொடர்ந்தும் எங்களால் பார்த்துக்கொண்டு கைகட்டி இருக்க முடியாது. நாம் வேண்டிய உள்ளுராட்சி மன்ற கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் நாம் இவ்வாறு வீதியில் இறங்கியிருக்க மாட்டோம். அதுபோல் எங்களை வீதிக்கு இறக்கியவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றோம், இந்த போராட்டம் சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை ஓயாது. எமது இளைஞர்கள் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சாய்ந்தமருது மக்கள் சிந்தித்து செயலாற்றக்கூடிய திறமை மிக்கவர்கள் மட்டுமல்லாது சுய கௌரவம் கொண்டவர்கள். அவர்களால் நிச்சயமாக எமது இந்த உரிமை போராட்டத்திற்கு கைகொடுக்க முடியும். எதிர்வரும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் எமது சுயேட்சை வேட்பாளர்களை அவர்கள் அதிகாரபீடம் ஏற்றுவார்கள். அதனை வைத்து நாம் உள்ளுராட்சி மன்றத்தை வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.