பாலித ரங்கே பண்டாரவுக்கும் மலிக் சமரவிக்ரமவுக்கும் அரச வனங்களிலுள்ள மரங்கள் டொலர்களாகவே தென்படுவதாகவும், இதுவே இந்த அரசாங்கத்தின் பச்சை வீட்டுச் சிந்தனை எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.
வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார மீது ஆனந்த சாகர தேரர் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் ஒரு வேண்டுகொளை விடுக்கின்றோம். இந்த பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக இழுத்து வந்து அலரி மாளிகையில் எங்காவது ஒரு மூலையில் கட்டிப்போடுங்கள்.
பாலித ரங்கே பண்டார வில்பத்து காடழிப்பில் நேரடியாக தொடர்புபட்டுள்ளார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்த சாகர தேரர், ஜனாதிபதி வில்பத்து பிரச்சினை தொடர்பில் எடுத்துள்ள முன்னெடுப்புக்களை பாராட்டுவதாகவும் கூறினார்.