மக்களிடையே நல்லிணக்கம், சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும்

NEWS
1 minute read


சகல சமய கோட்பாடுகளும் வழிகாட்டும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தலைமை வகிக்குமாறு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன சர்வ மத தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.


நேற்று பிற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
நாட்டைப் பிரிப்பதற்காக போராடிய தீவிரவாதிகள் யுத்தத்தின் மூலமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணங்கள் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை என்றும் மாற்று எண்ணக்கருக்களினூடாகவே அவற்றை இல்லாது செய்யலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே பல்வேறு பிரச்சினைகளும் நெருக்கடிகளும் கடந்த சில தசாப்தங்களாக எமது நாட்டில் காணப்பட்டபோதிலும் விகாரை, பள்ளிவாசல் மற்றும் கோவில்களின் சமயத் தலைவர்களிடையே அத்தகைய பிரச்சினைகள் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , தவறான பாதையில் பயணிக்கும் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு சமயப் போதனைகளும், கோட்பாடுகளுமே ஏதுவாக அமைகின்றன என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படாத வகையில் நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிணைவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி , மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் சமய சகவாழ்வு குழுக்களை நியமித்து சகல மக்களிடையேயும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் அமரபுர நிக்காயவின் மகாநாயக்க தேரர் வண. கொடுகொட தம்மாவாச நாயக்க தேரர், மல்வத்து பிரிவின் வண. பகமுனே சுமங்கல தேரர், அஸ்கிரிய பிரிவின் மெதகம தம்மானந்த தேரர், ராமக்ஞ நிக்காயவின் வண. அத்தன்கனே சாசனரத்தன தேரர், உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களான மனோ கணேசன், சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
To Top