மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக சில நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்தார்.
ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என ஆங் சான் சூகியிடம் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் ஆங் சான் சூகியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இவ்விவகாரம் தொடர்பாக மியான்மர் அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகியை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மியான்மரில் ரோஹிங்கியா இனத்தவர்களுக்கு எதிரான படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்னும் நமது செய்தியை மியான்மர் தலைவர்களுக்கு இந்த கண்டன தீர்மானத்தின் மூலம் பதிவு செய்கிறோம்.
அங்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டி உடனடியாக வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரக்கினே மாநிலத்தில் நடைபெற்றுவரும் நடவடிக்கைகள் தீவிரவாத ஒழிப்பின் ஒருபகுதி என்று மியான்மர் அரசு கூறி வருவதை நாங்கள் நிராகரிக்கின்றோம். இது முற்றிலும் மூடத்தனமான கருத்து. அங்கு நடந்து வருவது அப்பட்டமான இன அழிப்பாகும்.
அரசின் தலைமை ஆலோசகராக உள்ள ஆங் சான் சூகி தலைமை பதவிக்கான தார்மீக பொறுப்பின்படி இப்போதாவது ஏதாயினும் செய்ய முன்வர வேண்டும் எனவும் இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.