Top News

நாட்டை முன்னேற்றுவதற்கு சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படல் வேண்டும்


நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமென  ஜனாதிபதி தெரிவித்தார்.
மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சிகளை பெறும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 
இன்றைய தினம் பொலன்னறுவை நகரில் இடம்பெறவுள்ள பல்வேறு வைபவங்களில் பங்குபற்றுவதற்காக நேற்று பொலன்னறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்த்துசித்த பனன்வல, மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தின் சேனாதிபதி பிரிகேடியர் சுராஜ் பன்ஸஜயா ஆகியோர் இதன்போது ஜனாதிபதியை வரவேற்றனர். 
மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி நெறியினை தொடரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, கொடிய தீவிரவாத இயக்கத்தினை தோல்வியடையச் செய்து தாய் நாட்டுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொடுக்க எமது பாதுகாப்பு படையினரிடம் காணப்பட்ட சிறந்த ஒழுக்கமே காரணமெனத் தெரிவித்தார். 
எச்சரிக்கைகள், குறிக்கோள், அர்ப்பணிப்பு மற்றும் சவால்களை வெற்றிக்கொள்ளல் தொடர்பான தமது வாழ்வியல் அனுபவங்களை இங்கு நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தவறான பாதையில் பயணிக்கும் சமூகத்தை சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பழக்கங்களையும் பயிற்சிகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.  
பொதுமக்களின் இதயத் துடிப்பை இனங்கண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டினார்.
“கோட்பாட்டு ரீதியான மற்றும் செயன்முறை பயிற்சிகளினூடாக தலைமைத்துவ பண்பையும் நேர்மறை எண்ணங்களையும் விருத்தி செய்தல்” எனும் தொனிப்பொருளில் 1521 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் 1904 புதிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தின் தலைமையிலான இந்த தலைமைத்துவ பயிற்சித்திட்டம் வழங்கப்படுகின்றது. 
Previous Post Next Post