Top News

சாய்ந்தமருதின் பேரணிகள் முடிந்தபாடில்லை; தீர்வுதான் இன்னுமில்லை!!



-எம்.வை.அமீர்-

சாய்ந்தமருதுக்கு தனியானதொரு உள்ளுராட்சிசபை என்ற அந்த மக்களின் மூன்று தசாப்தம் தாண்டிய போராட்டம் பல்வேறு விதங்களில் உக்கிரமடைந்துள்ள நிலையில், 2017-12-01 ஆம் திகதி மாலை கறுப்புக்கொடிகளை ஏந்திய அமைதி பேரணி இடம்பெற்றது.

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் முற்றலில் ஆரம்பித்த பேரணி மாளிகைக்காடு எல்லை வரைச் சென்று பின்னர் மீண்டும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் முற்றலை வந்தடைந்தது.
தங்களுக்கான உள்ளுராட்சிசபையை வழங்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் பேரணியில் சென்றோர் ஏந்திச் சென்றனர்.

மூன்றுநாள் கடையடைப்பு, வீதிமறியல் போராட்டம், மாட்டுவண்டு பேரணிப் போராட்டம், என பல்வேறுபட்ட விதத்தில் அரசின் பார்வையை தங்களது கோரிக்கை மீது செலுத்தும் விதத்தில் போராடிவரும் சாய்ந்தமருது மக்கள் இன்றும் கறுப்புக்கொடிகளை ஏந்திய அமைதி பேரணியை ஏற்பாடு செய்து முன்னெடுத்துச் சென்றனர்.

உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து தங்களது நியாயத்தை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்து வரும் இம்மக்கள் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவின் தலைமையின் கீழ் தங்களது போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post