அமைச்சர் ரிசாட் பதியுதீனை பணி நீக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்று -26- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பதியுதீன் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் காதை பிடித்து இழுத்து வெளியே வீச வேண்டும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் நாம் 2014ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே கூறி வருகின்றோம்.
நாம் இது குறித்து ஊடக சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
துரதிஸ்டவசமாக அனைவரும் எம்மை இனவாதிகள் என அடையாளப்படுத்தியிருந்தனர். முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் உள்ளிட்ட குழுவினர் இந்த காடழிப்பு பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
வில்பத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். விசாரணை நடத்தி குற்றவாளிகள் உரியமுறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ரிசாட் பதியுதீன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போது ரவி கருணாநாயக்க பதவியை இராஜினாமா செய்தார், ஓர் பிரச்சினை காரணமாக விஜயதாச ராஜபக்ச அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இந்த மாதிரியான ஓர் தீர்மானம் ஏன் ரிசாட் தொடர்பில் எடுக்கப்படுவதில்லை. நிறைவேற்று அதிகாரம் தேவையான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவே இருக்கின்றது.
படமெடுக்காவிட்டால் பாம்பை கூட விறகு கட்டுடன் சேர்த்து கட்டி விடுவார்கள் என புத்தபெருமானும் கூறியுள்ளார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.