இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் அவர்களுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
அரசியல் நல்லுறவினை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது உள்நாட்டு அரசியலும் முஸ்லிம்களின் வகிபாகமும் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கடந்த கால முஸ்லிம் அரசியல் வரலாறு மற்றும் நிகழ்கால முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் ரீதியான நகர்வுகள் தொடர்பாகவும் விளக்கமளித்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் அடிப்படைவாத முஸ்லிம் அரசியல், முஸ்லிம்களின் உரிமை சார் பிரச்சினைகள், அரசியல் தீர்வுத் திட்டங்கள் தொடர்பான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பல்வேறுபட்ட சவால்களுக்கு அரசியல் ரீதியான சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு ஜப்பான் நாட்டினதும் சர்வதேசத்தினதும் ஆதரவினை தாம் பெரிதும் எதிர்பார்பதாகவும் இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பானது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.