Top News

ஹரீஸை கடிந்து கொண்ட ரவூப் ஹக்கீமும் ரிஷாத் –ஜெமீலின் அர்த்தமற்ற சந்திப்பும்!


சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸின் இறுக்கமான நிலைப்பாடு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடுமையான அதிருப்பியை வெளியிட்டுள்ளார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் ஹரீஸை தனது வாசஸ்தலத்துக்கு வரவழைத்து ஹரீஸின் நிலைப்பாடு தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் அவரைக் கடிந்து கொண்டுள்ளார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்குவதாயின் கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் ஹரீஸ், கல்முனை மக்கள் முன்னிலையில் தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்திய தினத்தன்று, நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதியமைச்சர் ஹரீஸை கலந்து கொள்ள வேண்டாம் என்றும் உடனடியாக கொழும்பு திரும்புமாறும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையிலும், அவரது வேண்டுகோளை நிராகரித்து குறித்த கூட்டத்தில் ஹரீஸ் கலந்து கொண்டமை தொடர்பிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், மற்றும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான கலாநிதி ஜெமீல் ஆகியோர், எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
எது எப்படியிருப்பினும் கல்முனையை நான்காகப் பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயமானது, பிரதியமைச்சர் ஹரீஸின் இணக்கப்பாடின்றி ஒரு போதும் கைகூடப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
Previous Post Next Post