வை எல் எஸ் ஹமீட்
ஒரு தேர்தலில் அரசியல் கட்சிகளாகவோ சுயேச்சைக் குழுக்களாகவோ போட்டியிடுகின்ற உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. அதே நேரம் மத ஸ்தாபனங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேர்தல் ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டிருக்கின்றது. மத ஸ்தாபனங்களிலுள்ள தனிநபர்களுக்குத் தடையில்லை. ஆனால் மத ஸ்தாபனமாக ஈடுபட முடியாது. ஏனெனில் மத ஸ்தாபனங்கள் பொதுவானவையும் நடுநிலை பேணவேண்டியவையுமாகும்.
நமது நாட்டில் பஞ்சாயத்துக்கள் இல்லை. ஆனாலும் பள்ளிவாயில்கள் சமூக ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற விடயங்களில் கடந்த காலங்களில் சில கட்டுப்பாடுகளை சமூகத்தில் விதித்த வரலாறுகள் உண்டு. ஆனாலும் அக்கட்டுப்பாடுகள் நாட்டின் சட்டங்களை மீறுவதாக இருக்க முடியாது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பல பள்ளிவாயில் நடவடிக்கைகள் அவ்வாறு மீறுவதாக அமைந்து அதனால் நீதிமன்றப் படியேறும் நிலைகள் ஏற்பட்டு இன்று அவ்வாறான கட்டுப்பாடுகள்கூட பல ஊர்களில் தளர்ந்து விட்டன.
வாக்குரிமையில் பள்ளிவாயில் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா?
------------------------------
சாதாரண விடயங்களிலே சட்டத்தைமீறி பள்ளிவாயில்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாதபோது, அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கின்ற " வாக்குரிமையைக் கட்டுப்படுத்துகின்ற உரிமை பள்ளிவாயில் நிர்வாகங்களுக்கு, அதுவும் சாதாரணமாகவே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேர்தல் ஆணைக்குழுவினால் தடைசெய்யப்பட்ட நிலையில் இருக்க முடியுமா?
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதில் சில சரத்துக்களை மாற்றுவதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. வாக்குரிமையும் அவ்வாறான சரத்தில் ஒன்று. வாக்குரிமை மக்களின் இறையமையின் ஓர் அங்கம் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. அவ்வாறான வாக்குரிமையைப் பாவிக்கின்ற ஒரு தேர்தலில் பள்ளிவாயிலின் பெயரால் ஒரு கூட்டம், மாற்றுக் கட்சியினர் தேர்தல் கேட்கக் கூடாது. தேர்தல் நடவடிக்கைகளில், பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது; என்று கட்டளை இடுவது எவ்வளவு பாரதூரமான விடயம்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஒரு உரிமையை சில அரசியல் பின்னணிகளைக் கொண்ட ஒரு கூட்டம் பள்ளி நிர்வாகத்தின் பெயரால் தடுக்க முனைகின்றது; என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கினால் எங்கே போய் நிற்கும்; என்று இவர்கள் சிந்தித்தார்களா?
பள்ளிவாயில் பொறுப்பில்லை
---------------------------
போராட்டத்திற்கு பள்ளிவாயில் உரிமை கோருகின்றது. சுயேச்சைக்குழுவுக்கு ( தேர்தல் விதிகளுக்கு முரணானபோதும்) பள்ளிவாயில் உரிமை கோருகின்றது. ஆனால் அந்தப் போராட்டத்தின் பெயரால் உருவப் பொம்மைகள் எரித்தால் அதற்கு பள்ளிவாயில் பொறுப்பல்ல. அந்தப் போராட்டத்தின் பெயரால் ஒரு இலக்கியக் கலந்துரையாடலுக்குள் புகுந்து துவம்சம் செய்தால் பள்ளிவாயில் பொறுப்பல்ல.
அப்போராட்டத்தினதும் சுயேச்சைக் குழுவினதும் பெயரால் அடுத்த கட்சி வேட்பாளர்களின் வீடுகளை உடைத்தால் அதற்கு பள்ளிவாயில் பொறுப்பல்ல, ஆனால் போராட்டமும் சுயேச்சைக் குழுவும் பள்ளிவாயிலுக்குரியது. தாங்கள் எதைச் சொன்னாலும் அது மாத்திரம்தான் நியாயமென இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா?
அரசியல் கட்சித் தலைவருக்குத் தடை
------------------------------
கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமையாகும். வாக்குரிமை என்பது இறைமையின் ஓர் அங்கமாகும். ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சியின் கருத்தை மக்களிடம் சொல்ல வருவது தடுக்கப்படுகின்றது; என்றால் இந்த இரண்டு உரிமைகளும் தடுக்கப்படுகின்றது; என்பது பொருளாகும். இதனைச் செய்வதற்கு அரசுக்கே அதிகாரம் கிடையாது; ஒரு பள்ளிவாயில் நிர்வாகத்திற்கு எவ்வாறு இருக்க முடியும். எவ்வளவு பாரதூரமான விடயம்.
பள்ளிவாயில் தலைவர் ஒரு பேட்டியில் முதல் கேள்விக்கு ' மக்கள்தான் தடுத்தார்கள்'; என்று தனது பொறுப்பில் இருந்து விலக முற்படுகின்றார். இங்கு எழுகின்ற கேள்வி, அவ்வாறு தடைசெய்ய முற்பட்டவர்கள் மாத்திரம்தான் சாய்ந்தமருது மக்களா? இன்னுமொரு வேட்பாளரின் கூட்டத்தைத் தாக்க முற்பட்டபோது அவர்களை ஓடோடத்துரத்தியதும் சாய்ந்தமருது மக்கள்தானே!
அதேநேரம் அதே பள்ளிவாயில் தலைவர், அடுத்த கேள்வியான, ஏன் குறித்த கட்சியின் தலைவரையே தடுக்கிறீர்கள், என்று கேட்டபோது அவர்தான் எங்களை கூடுதலாக ஏமாற்றினார், அதனால்தான் அவர்மீது கூடுதல் வெறுப்புக் கொண்டிருக்கின்றோம். தடுக்கின்றோம்; என்று கூறி தடுத்தது தாமே என்பதை ஏற்றுக் கொள்கின்றார். மட்டுமல்லாமல் அதனை சற்று மெருகூட்டி 'மக்களாகிய நாம்' தடுக்கின்றோம்; என்று கூறுவதன்மூலம் அவர், எங்கெல்லாம் ' மக்கள்' என்ற பதம் பாவிக்கின்றாரோ அங்கெல்லாம் அவர் ' தன்னையும் தன் நிர்வாகத்தையும்' உள்ளடக்கியே அந்தப்பதத்தைப் பாவிக்கின்றார்; என்பதை வெளிப்படுத்துகின்றார்.
சுருங்கக் கூறின் 'எந்த வீடுடைப்பு, எந்த வழிமறிப்பு எல்லாவற்றையும் மக்களின் தலையில் போட்டுத் தப்பிக்க இதுவரை முற்பட்டாரோ, அந்த மக்களும் ' நாங்கள்தான்' என்பதை ஒப்புக் கொள்கின்றார்.
பள்ளிவாயில் நிர்வாகம் அரசியல் கட்சியா?
------------------------------
கூட்டாக அரசியல் செய்வதற்கு சட்ட ரீதியான ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை வழங்குவதுதான் ' கட்சி' எனப் படுகிறது. ஒரு தேர்தலில் அவ்வாறு அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மாத்திரமல்ல, தற்காலிகமாக அத்தேர்தலுக்காக மாத்திரம் கூட்டாக இணைந்து செயற்படுவதற்கும் சட்டம் அங்கீகாரம் வழங்குகின்றது. அந்த அங்கீகாரத்தைத்தான் ' சுயேச்சைக் குழு' என அழைக்கிறார்கள். ஒரு தேர்தலைப் பொறுத்தவரை ஒரு கட்சிக்குரிய அனைத்து உரிமையும் ஒரு சுயேச்சைக்குழுவுக்கும் உண்டு. அதாவது பெயர் ' குழு' என்று இருந்தாலும் யதார்தத்தில் அத்தேர்தலைப் பொறுத்தவரை அதுவும் ஒரு கட்சிதான்.
சாய்ந்தமருது சுயேச்சைக் குழு பள்ளிவாயிலுக்குரியது; என்றால் யதார்ரதத்தில் பள்ளிவாயில் அரசியல் கட்சியாக மாறுகின்றது. மட்டுமல்ல, அதற்கு ' சுயேச்சை' என்று பெயர் இருந்தாலும் அது சுயேச்சை இல்லை. ஏனெனில் அது சுயேச்சையாக போட்டியிடவில்லை. மாறாக பள்ளிவாயில் நிர்வாகம் எனப்படும் கட்சியினால்தான் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறாயின் எவ்வாறு ஒரு கட்சி இன்னுமொரு கட்சியை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது; என்று உத்தரவிட முடியும்.
இன்று சாய்ந்தமருதில் அல்லாஹ்வின் இல்லத்தின் பெயரால் பாரிய சட்டமீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாயில் தலைவரின் பேட்டியில் பல பாரதூரமான சட்டவிரோத விடயங்களை அவர் கூறுகின்றார். அதாவது பல இடங்களில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார்.அவை எல்லாவற்றையும் இங்கு சுட்டிக்காட்ட முனையவில்லை.
நாட்டுச் சட்டத்தை மதிக்கவேண்டியது முஸ்லிம்களின் கடமை. அதனை பள்ளிவாயிலே அப்பட்டமாக மீறுவது இஸ்லாத்திற்கே முரணானதாகும். இவ்வாறான செயல்கள் நமது சாய்ந்தமருதூரின் பெயரிற்கு நாடளாவிய ரீதியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. வெளிப்படையில் பள்ளிவாயில் உரிமை கோரினாலும் இச்சுயேச்சையை உண்மையாக பிரசவித்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது.
எனவே, பள்ளிவாயில் நிர்வாகத்தினர் சட்டத்தை மதியுங்கள். மக்கள் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும். மக்களின் வாக்குரிமையைத் தீர்மானிக்கின்ற உரிமை அரசியலமைப்புச் சட்டம் பள்ளிவாயில் நிர்வாகத்திற்குத் தரவில்லை. எனவே, மக்களின் உரிமையை மதியுங்கள். சட்டத்தை மதியுங்கள். அல்லாஹ்வின் இல்லத்தின் கண்ணியத்தைப் பேணுங்கள். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
சாய்நதமருதில் எத்தனையோ கண்ணியவான்கள் இருக்கின்றார்கள். ஊருக்கு கெட்டபெயர் வருகின்றபோது அது ஊரில் உள்ள எல்லோரையும்தான் பாதிக்கும்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.