வடக்கு – கிழக்கு உட்பட இலங்கையின் பெரும்பகுதியைத் தாக்கக் கூடிய புயல் வங்கக் கடலில் வலுப் பெறுகின்றது என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் புயல் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.பிரேம்லால் தெரிவித்தார்.
வளிமண்டலக் குழப்பம் காரணமாக இலங்கையின் பல பாகங்கள் கடந்த சில நாள்களாகப் பாதிக்கப்பட்டன. காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறியதில் இலங்கையின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பொழிந்தது.
ஓகி என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல் இலங்கை விலகிச் சென்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாழமுக்கம் இலங்கை மற்றும் இந்தியாவைத் தாக்கக் கூடிய புயலாக மாற்றமடையும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
“அதன்போக்கு மாற்றங்கள் தொடர்பாக அறிந்தபின்னரே உறுதியான தகவலைத் தெரிவிக்க முடியும்.”- என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.