Top News

சவுதியிடம் நஷ்டஈடு கோரும் இஸ்ரேல்!


தமது வீரர்களுக்கு வீசா வழங்காமை தொடர்பில் சவுதி அரசிடம் நஷ்டஈடு கோரப்போவதாக இஸ்ரேல் செஸ் விளையாட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் நடைபெறும் செஸ் போட்டியொன்றில் விளையாடுவதற்கு இஸ்ரேல் வீரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான வாய்ப்பு சவுதியினால் மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த செஸ் போட்டியானது சவுதி அரேபியாவில் நடைபெறும் முதலாவது சர்வதேச செஸ் போட்டித்தொடராகும்.
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் சட்டத்தின்படி எந்த நாட்டினதும் வீரர்களுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் குறித்த போட்டித்தொடரில் கலந்து கொள்ள ஈரான், கட்டார், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சர்வதேச செஸ் சம்மேளன அதிகாரிகள் மற்றும் சவுதி அரேபிய அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஈரான், கட்டார் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேல் வீரர்களுக்கான வாய்ப்பினை வழங்க சவுதி அதிகாரிகள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசு இஸ்ரேல் தொடர்பில் கடைபிடிக்கும் கொள்கைகளை எந்த கட்டத்திலும் மாற்றப்போவதில்லை என இது தொடர்பில் கருத்து தெரிவித்த சவுதி அரேபியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சவுதி அரேபியா சர்வதேச செஸ் சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் தமது வீரர்களின் தொழில் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதற்கு தாம் சவுதி அரேபியாவிடம் நஷ்டஈடு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச செஸ் சம்மேளனம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்றைய தினம் குறித்த போட்டி ஆராம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post