"அம்பாறை மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் அதிகளவில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிலும் கல்முனை கல்வி வலயத்திலேயே அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியதும் கவலைக்குரியதுமான விடயமாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,
பாடசாலைமாணவர்கள் போதை தரும் பொருட்களினை பாவிப்பதனை விடுத்து கல்வியின் மூலம், கற்றலுடன் தொடர்புள்ள ஓவியம்,வாசிப்பு,மற்றும் ஆக்கச்செயல்பாடுகளின் மூலமே போதையடைய வேண்டுமே ஒழிய தற்காலிகமான போதை தருகின்ற வஸ்துக்களில் தங்கியிருந்து தமது பொன்னான எதிர்காலத்தினை பாழ்படுத்திவிடக்கூடாது."என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ்.MT.அப்துல் நிஸாம் குறிப்பிட்டார்.
நிந்தவூர் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் "பொலித்தீனுக்கு மாற்றுப்பொருள் என்ன?" என்ற தொனிப்பொருளில் நிந்தவூர் நலன்புரிச்சபையினால் (NWC) நடாத்தாப்ட்ட கட்டுரை,பேச்சு மற்றும் சித்திரப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வில் நேற்று மாலை (03/12/2017) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் செய்தியினை குறிப்பிட்டார்.