Top News

அரசுடமையாக்கப்படும் மக்கள் காணிகள்???



திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியாவின் பல பகுதிகளிலும் மக்களுடைய பூர்வீக காணிகள் அரசுடைமையாக்கப்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் காரணமாக யானை வேலி அமைப்பதை வனபாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மக்கள் தங்களது பூர்வீக விவசாய நிலங்கள் சட்டரீதியான காணிக்கான உறுதிப்பத்திரம் கூட இருந்தபோதிலும் ஆயிலியடி, மஜீத் நகர் கிராம, உப்பாறு கிராம சேவையாளர் பிரிவில் பெரும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

வனபாதுகாப்புத் திணைக்களமானது காலப்போக்கில் வர்த்தமானி மூலமாக வனபாதுகாப்புப் பிரதேசம் என்ற அறிவித்தலை வெளியிட்டால் மக்களுடைய சொந்த காணி அரசுடைமையாக்கப்பட்டு விடும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் உட்பட நாடாளுமன்றம் வரையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், வனப்பகுதிக்குள் தான் யானை வேலிகள் அமைக்கப்படும். ஆனால் தனியார் காணிகளில் அதனை அமைப்பதென்பது எந்தளவிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post