கம்பஹா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைகளைக் கருத்திற் கொண்டு, அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
அவசர நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதற்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகங்களும் துரிதமாக செயற்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீதிகள் மற்றும் வீடுகளுக்கு மேலால் சரிந்து விழுந்துள்ள பாரிய மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்பாக, மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் ஏதாவது ஒரு பிரதேசத்தில், இயற்கை அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழ்நிலையொன்று உருவானால், இது தொடர்பில் தமது கிராம சேவகர் ஊடாக குறித்த பிரதேச செயலகத்திற்கோ அல்லது மாவட்ட செயலகத்திற்கோ உடனடியாக அறிவிக்குமாறும், மாவட்ட செயலாளரினால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், கம்பஹா மாவட்ட மீனவர்கள் இன்னும் ஒரு வார காலப்பகுதிக்குள், குறிப்பாக பலத்த காற்று வீசும் சந்தர்ப்பத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறும், மாவட்ட செயலர் மீனவர்களைக் கேட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா - அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் பாரியளவில் உயர்ந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் ஓரிரு நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், ஆற்றங்கரைக்கு அருகே வசிப்போர் மிகவும் அவதானத்துடன் நிதானமாக நடந்து கொள்ளுமாறும், பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )