கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் நேற்று (21) வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு தென்கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.அஸ்லம் மற்றும் ஏ.எல்.ஹுசைன்துன், நிருவாக உத்தியோகத்தர் எம்.றபியுதீன் ஆகியோரும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை, ஆலம்குளம், தீகவாபி மற்றும் மீலாத் நகர் ஆகிய பிரதேசங்களில் கலை இலக்கியத் துறைக்காக சேவையாற்றிய துறைசார்ந்த சுமார்; 30 கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளதுடன், அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மூவின சமூகங்களினையும் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறான கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.