டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த புதிய பக்டீரியா!

NEWS

அ​வுஸ்திரேலியாவின் மொனெஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “Wolbachia” (வோல்பசியா) எனும் ​பக்டீரியாவைக் கொண்டு, டெங்கு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதென, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
 இதற்காக, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கையில், நுளம்புகள் மூலம் பெருகும் தொற்று நோய்களில், டெங்கு முதன்மை பெருகின்றது. அதனால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேவை, அத்தியாவசியமாகி உள்ளது.
“இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மொனேஷ் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மேற்படி பக்டீரியாவானது, நுளம்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் காணப்படும் சுமார் 60 பூச்சியினங்களின் உடல்களில் இயற்கையாகவே வாழ்ந்துவருவதாகும்.
“இருப்பினும் இந்த பக்டீரியாவானது, டெங்குத் தொற்றைப் பரப்பும் விசேட நுளம்பினமான ஈட்ஸ் ஈஜிப்டை எனும் நுளம்பினங்களில் காணப்படுவதில்லை. இந்த பக்டீரியா உள்ளடங்கிய நுளம்புகளின் உடல்களில், டெங்கு வைரஸ் தொற்றுவதில்லை. இதனால், டெங்கு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் திறன், வோல்பசியா பக்டீரியாவுக்கு உள்ளது.
“இதனால், இந்த பக்டீரியா அடங்கிய “ஏடெஸ் ஈஜிப்டி” (Aedes aegypti) என்ற நுளம்பினத்தைப் பரப்பி, டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் வெற்றியளித்துள்ளது.
“இந்நிலையிலேயே, இலங்கையிலும் இந்த வேலைத்திட்டத்தை தெரிவு செய்யப்பட்ட சில ​பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, மொனேஷ் பல்கலைக்கழகம் இணங்கியுள்ளது. அதற்கு, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான நிதி உதவிகளைச் செய்யவும் வாக்குறுதி அளித்துள்ளது” என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 
6/grid1/Political
To Top