எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.
சுகயீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உடல்நிலை தேறி அண்மையில் இரா.சம்பந்தன் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படின் உடனடியாக தெரிவிக்குமாறு சம்பந்தனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த சம்பந்தன், அப்படியான உதவிகள் எதுவும் இப்போதைக்கு தேவைப்படாதென தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சம்பந்தனுக்கு வெளிநாட்டு மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை செய்துகொடுப்பது குறித்தும் அரசு பரிசீலித்துவருவதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுகயீனமுற்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் நேரில் சென்றிருந்தனர்.
நேரில் சென்ற இருவரும் சம்பந்தனின் நலம் விசாரித்துள்ளனர். மஹிந்த நேரில் சென்றும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.