Top News

கோத்தபாயவுக்கு அரசியல் தெரியாது: மகிந்த


அரசியல் தெரியாத முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்குள் இழுத்து அவரை அழிப்பது பிரச்சார நிறுவனம் ஒன்றின் வர்த்தகர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்தி கொழும்பு நகரில் அண்மையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“கோத்தா அப்பாவி. திலித் ஜயவீர சுவரொட்டிகளை ஒட்டி ஆடும் விளையாட்டில் இறுதி கோத்தாவே பாதிக்கப்படுவார். திலித் ஒரு சுவரொட்டியை ஒட்டும் போது மங்கள இரண்டு சுவரொட்டிகளை ஒட்டுவார்.

இதனை கோத்தபாயவினால் எதிர்கொள்ள முடியாது. இதன் மூலம் இல்லாத பிரச்சினைகள் ஏற்படும். திலித் கோத்தபாயவுடன் இருக்கும் அதேநேரம் ரணிலுடனும் இருக்கின்றார்.

இதனை அறிந்த மைத்திரியின் ஆட்கள் கோத்தாவை இறுக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக பசிலும் கோபத்தில் உள்ளார்” என மகிந்த ராஜபக்ச கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த நாளில் அவரது ஆதரவாளர்கள் எங்களது கோத்தா நமக்காக நாம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கோத்தா அச்சம் மறந்து விட்டதா? நமக்காக கொலைக்காரன் என்ற வாசகங்களுடன் மற்றுமொரு சுவரொட்டி கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
Previous Post Next Post