Top News

இலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா



இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் பெருட்களுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 31 ஆம்  திகதியுடன் காலாவதியாகின்றது.
இந்நிலையில், அடுத்த 2018 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி.யின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. 
இதன் விளைவாக ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இவ்வாண்டுடன் காலாவதியாவதனால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படவுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக இருப்பதில் பெருமை கொள்கின்றது.  பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்காவானது  2.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.
குறித்த நிகழ்ச்சித் திட்டம் செயற்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர், ஐக்கிய அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு இணையத்தளத்தின் பிரத்தியேக பக்கத்தில் பார்வையிட முடியும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post