தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக கிண்ணியா கல்வி வலய அதிபர் சங்கத்தைக் கிழக்கு மாகாண கல்வி அதிகாரி ஒருவர் கூறு போட்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நான் கிண்ணியா கல்வி வலயம் கடைசி நிலையில் இருப்பதற்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமே காரணம் என பல்வேறு உதாரணங்கள் மூலம் குற்றம் சாட்டியிருந்தேன்.
இதற்கு கிண்ணியா கல்வி வலய அதிபர் சங்கத்தின் பெயரில் ஊடகமொன்றில் கடந்த வாரம் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப் பட்டிருந்தன. நான் குற்றம் சாட்டியது மாகாணக் கல்விப் பணிப்பாளரை. ஆனால் மாற்றுக் கருத்து வெளியிட்டது கிண்ணியா அதிபர் சங்கம்.
இது தங்களது சங்கத்தின் கருத்தல்ல என்று தற்போது கிண்ணியா வலய அதிபர் சங்கத் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட சிலர் தங்களது நோக்கங்களை அடையும் பொருட்டு சங்கத்தின் பெயரை தவறாகப் பயன் படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாத அந்த மாகாண அதிகாரி முக்கியம் வாய்ந்த அதிபர் சங்கத்தை இரண்டாகப் பிளவு படுத்தியுள்ளார். தனது நோக்கத்தை முறைகேடான முறையில் அடைந்து கொள்வதற்காக பின்கதவால் வந்து அதிபர் எனப் பெயர் தாங்கியுள்ள சிலரைப் பயன்படுத்தியுள்ளார். நேர்மையாகச் செயற்படும் ஒரு அதிகாரிக்கு இது அழகான செயலல்ல என்பதைப் பரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையிலுள்ள 98 கல்வி வலயங்களுள் கிண்ணியா கல்வி வலயம் கடந்த சில வருடங்களாக 98வது கல்வி வலயமாக கடைசி நிலையில் இருப்பது குறித்து நான் உரையாற்றினேன். எந்தப் பரீட்சையில் 98வது என்று நான் குறிப்பிட வில்லையாம். கிண்ணியா வலயத்தின் ஏந்தப் பரீட்சைப் பெறுபேறுகள் மிகவும் திருப்தியாக இருக்கின்றன என்று சம்பந்தப் பட்ட அதிகாரி தெளிவுபடுத்துவாரா என்று கேட்கிறேன்.
கிண்ணியா கல்வி வலயத்தில் குறித்த காலத்தில் 5 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கடமையாற்றியது தான் கல்வி பின்னடைவுக்கு காரணம் என புதிய கண்டு பிடிப்பொன்றை அவர் குறிப்பிட்டுள்ளார். எத்தனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பணி பரிந்தாலும் அவர்களை மேற்பார்வை செய்வது யார்? மாகாணக் கல்வித் திணைக்களம் தொடர் மேற்பார்வை செய்து வந்திருந்தால் இந்தக் குறைகளை எப்போதோ கண்டு திருத்தியிருக்கலாம். இப்போது மற்றவர் மீது குறைசொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் நிலை வந்திருக்காது.
புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றை உயர்த்த 3, 4, 5ஆம் தர மாணவர்களுக்கு மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாம். செயலட்டைகள் வழங்கப் பட்டதாம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாம். இருந்தும் கடைசி நிலை மாறவில்லையே. இது குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டதா? பரிகாரம் காணப்பட்டதா? ஏன்றால் இல்லை என்பது தான் பதில்.
எனவேää மாணவர்களுக்கு வினாத்தாள்கள், செயலட்டைகள் வழங்கியமை. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை என்பன வந்த ஒதுக்கீட்டை செலவு செய்ய எடுத்த நடவடிக்கைகளே அன்றி உண்மையாக கல்வி அபிவிருத்தியில் அக்கறை கொண்ட செயற்பாடாகத் தெரியவில்லை.
குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த அதிபருக்கு பாடசாலைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிபர் எவ்வளவு காலம் அந்தக் கோட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தார்? அதற்கான காரணம் யாது? அக்காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் என்ன என்பதை மாகாணக் கல்விக்குப் பொறுப்பானவர் தெளிவு படுத்த வேண்டும்.
விஞ்ஞான முதுமானி கிண்ணியாக் கோட்டத்தில் இணைக்கப்பட்டதற்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் எவ்வித தொடர்புமில்லை. அது மாகாணக் கல்விச் செயலாளரின் வேலை என்று அந்த மாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விச் செயலாளர் எந்தவொரு கல்வி அதிகாரியினதும் சிபார்சும் இன்றி நேரடியாக அந்த நியமனத்தை வழங்கினாரா? என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.
அந்த விஞ்ஞான முதுமானிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு ஒரு கோட்டக் கல்வி அலுவலகத்தின் பதில் திட்ட அதிகாரி. இது அவருக்குப் பொருத்தமான பதவி அல்ல. இதனை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.
இவரது ஆற்றலைப் பயன்படுத்தி விஞ்ஞானக் கல்வியை விருத்தி செய்ய மாகாணக் கல்வித் திணைக்களத்திலோ அல்லது வலயக் கல்வி அலுவலகத்திலோ ஏதாவது பொறுப்புகள் கொடுத்திருக்கலாம். ஒரு வளத்தை சரியாகப் பயன்படுத்தாது முடக்கிவிடும் செயற்பாடுகளை மாகாணக் கல்விப் பகுதியினர் செய்துள்ளனர். இது தான் எனது ஆதங்கம்.
அரசியல்வாதிகளின் சிபார்சின் அடிப்படையில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சில ஆசிரியர்களை கிண்ணியா கல்வி வலயத்தில் இணைத்துள்ளார்கள் என்பது மற்றொரு பதில். நானும் கிண்ணியாவைச் சேர்ந்த அரசியல்வாதி. ஆனால் நான் முறைகேடான எந்த நியமனத்திற்கும் யாரையும் சிபார்சு செய்யவில்லை. எனவே எந்த அரசியல்வாதியின் சிபார்சின் அடிப்படையில் யார் யார் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுமதியின்றி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சில ஆசிரியர்களுக்கு இணைப்புகள் வழங்கியுள்ளார்கள் என்றால் அந்த தவறை திருத்த வேண்டிய பொறுப்பு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இல்லையா? இது தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன.
22 வருடங்களாக ஒரே பாடசாலையில் ஒரு அதிபர் கடமை புரிவது பற்றி நான் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கதைக்கும் வரை அந்த விடயம் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கண்களுக்கு படாமல் இருந்ததன் மர்மம் என்ன? எனது கேள்வியின் படி அந்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கியிருந்தால் இன்னுமொரு பாடசாலைக்குத் தானே இடமாற்றம் வழங்க வேண்டும். அவர் கோட்டத்தின் எந்த ஆளணித் தேவையை நிறைவேற்றுவதற்காக கிண்ணியா கோட்டத்தில் இணைக்கப்பட்டார்? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
கிண்ணியாவில் கடமை புரிந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் இடமாற்றங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர் செய்தார் என்று நான் குறிப்பிடவில்லை. எனவேஎனது உரையை சரியாக வாசிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கிண்ணியா வலயப் பாடசாலைகளின் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்து சரியான பரிகாரம் செய்யவில்லை என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகின்றேன். சரியான பரிகாரம் காணப்பட்டிருந்தால் மாற்றங்கள் தெரிய வேண்டும். மாற்றம் தெரியாவிட்டால் தமது பரிகாரச் செயற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாற்று பரிகாரங்களைக் காண வேண்டும். இது தான் சரியான முகாமைத்துவத்திற்கு அழகு.
அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாடசாலைப் பொறுப்புகள் வழங்காது அதிபர் தரமற்றவர்களுக்கு பாடசாலைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது எனது மற்றுமொரு குற்றச்சாட்டு. தரம் பெற்றவர்கள் தமக்கு பாடசாலைப் பொறுப்புகள் வேண்டாம் என்று கூறியதாக அந்த மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் பாடசாலை பொறுப்புகள் வேண்டாம் என்று கூறிய அதிபர்கள் யார் என்பதை தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் தாம் அப்படி யாருக்கும் சொல்ல வில்லை என்பது அதிபர் தரம் பெற்றவர்களின் கருத்தாக உள்ளது.
கிண்ணியாவின் கல்வி குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டும் என்று நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்து கூறி வருகின்றேன். ஆனால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக இப்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளேன்.
மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் முஸ்லிம் அதிகாரி இருப்பது அவசியம் தான். அப்படியானவர்கள் தனது கடமையில் உள்ள விடயங்களைச் செய்தாலே சமுகத்திற்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும். பெயரளவு அதிகாரியாய் இருப்பதில் என்ன பிரயோசனம் இருக்கின்றது.
எனது உரையில் சரியான விடயங்களைத் தான் நான் முன் வைத்துள்ளேன் அதில் எந்த தவறுகளும் இல்லை. எனவே அதிகரிகள் நேர்மையாகச் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தமது நோக்கங்களை அடைய குறுக்கு வழிகளைக் கையாள்வதை விட்டு விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.