மட்டு மாவட்டத்தின், காத்தாகுடி பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சுய தொழிலை மேற்கொள்வதற்கான இடியப்பம் அவிக்கும் உபகரணங்கள் என்பன முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 2017.12.04ஆம்திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
ஒரு சமூகத்தின் அபிவிருத்தி என்பது வெறுமெனே பௌதீக ரீதியான கட்டமைப்புகளை மாத்திரம் மையப்படுத்தியதல்ல. மாறாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனூடாக சமூகத்தின் வருமானத்தை வளர்ச்சிப் பாதையினை நோக்கி கொண்டு செல்வதனூடாகவே உண்மையான அபிவிருத்தியினை ஏற்படுத்த முடியும்.
இன்று எமது பிரதேசம் சவூதி அரேபியா போன்று அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறல்ல, இன்று எமது பிரதேசத்தில் அன்றாடம் மூன்று வேலை உணவினைக்கூட உண்பதற்கு போதியளவு வசதியற்ற எத்தனயோ குடும்பங்கள் பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையினை நடாத்தி வருகின்றனர். இத்தகையவர்களது வாழ்வாதரங்களை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்தகால மகிந்த ராஜபக்ஸ அவர்களுடைய ஆட்சிக் காலத்தின்போது முஸ்லிம்களுடைய பொருளாதாரங்கள் சேதமாக்கப்பட்டும், மதஸ்தலங்கள் உடைக்கப்பட்டும், உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் எமக்கு எதிராக பல்வேறுபட்ட அநீதிகளும் இழைக்கப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து மகிந்த ராஜபக்ஸ அவர்களது ஆட்சிக்கெதிராக ஒன்றிணைந்த போதிலும் ஒரு சிலர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இருந்தால் மாத்திரமே அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஆதரவளித்திருந்தனர்.
ஆனால் இன்று நாங்கள் மகிந்த ராஜபக்ஸ அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட அதிகமான அபிவிருத்தி பணிகளை எமது மக்களுக்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபையினுடைய இறுதி இரண்டரை வருட ஆட்சிக் காலத்தின்போது காத்தான்குடி பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 33 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி பணிகளை மக்களுக்காக மேற்கொண்டுள்ளோம்.
எனவே அபிவிருத்திகள் என்பது சமூகத்தின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்து மற்றவர்களின் காலினைப் பிடித்து மேற்கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் கிடையாது. மாறாக எமது சமூகத்திற்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் முஸ்லிம் தலைமைகள் கௌரவமான முறையில் வென்றெடுக்க முடியும்.
தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக மாத்திரம் எதிரானவர்களுடன் கைகோர்த்து செயற்படுவதற்கு அபிவிருத்தி என்ற போலியான ஒரு விடயத்தினை மக்கள் மத்தியில் காரணம் காட்டி சமூகத்தினை ஏமாற்றுபவர்கள் தொடர்பாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் பௌதீக அபிவிருத்திகளுக்கு மேலதிகமாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பாகவே கூடிய கவனம் செலுத்தி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம், அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் தனது உரையில் தெரிவித்தார்.