ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவவும், இலங்கைக்கு வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா வழங்கவுள்ளது.
கொழும்பில் தங்கியிருந்து, இந்த சட்ட ஆலோசகர் ஆலோசனைகளை வழங்குவார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர், வொசிங்டனில் நடந்த பூகோள சொத்து மீட்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒபாமா அரசாங்கம் பதவியில் இருந்தபோது, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, திருடப்பட்ட நிதியை மீட்பதற்கு கொழும்புக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.